Tuesday, July 7, 2009

மறுக்கப்படும் மருத்துவ நலன் : அமெரிக்க அவலம்

துணைவியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை உடனடியாக நடத்தியாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார் ஜிம் ஹான் என்ற அமெரிக்கத் தொழிலாளி. அவசரம், அவசரமாக மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக் கொள்ள விரைகிறார் ராபர்ட்டோ புர்சாக். ஆஸ்துமாவால் அவஸ்தைப்படும் ஸ்டீவ் டிரேக் தனது மருந்தை தாமதப்படுத்த முடியுமா என்ற ஆபத்தான பரிசோதனையில் இறங்குகிறார். வேலையிழப்பால் மருத்துவ காப்பீடு வசதியையும் இழக்கப்போகிறோம் என்கிற நெருக்கடியால் இந்த மூவருமே இத்தகைய முடிவுகளுக்கு செல்கிறார்கள். அமெரிக்க நெருக்கடி துவங்கியதிலிருந்து இத்தகைய நிலையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சென்றுள்ளார்கள்.

கடந்த 25 ஆண்டுகளில் எப்போதுமே இல்லாத அளவிற்கு அமெரிக்கர்கள் வேலைகளை இழந்து வருகிறார்கள். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி விழும் கதைதான். ஒரு புறம் வேலையிழப்பு. மறுபுறம், பணியிடத்தில் கிடைத்த மருத்துவக் காப்பீடு நின்று போனது. தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்படும் காப்பீடு சுமார் 17 கோடி அமெரிக்கர்களுக்கு உள்ளது. தனியாக மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டுமென்றால் அதற்கான தொகையை சாமானியர்களால் கட்ட முடியாது. இதனால் நிறுவனத்தால் எடுக்கப்படும் காப்பீட்டை நம்பித்தான் பெரும்பாலான அமெரிக்கர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மருத்துவ செலவுகளும் உயர, உயரப் பறந்து கொண்டிருக்கிறது. இதை மனதில் கொண்டுதான் தனது துணைவிக்கு அவசரமாக ஃபோன் செய்த ஜிம் ஹான், எனது வேலையை விரைவில் இழக்கப்போகிறேன். நமக்குள்ள காப்பீடும் காலாவதியாகிவிடும். உடனடியாக உனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து விடுவோம் என்கிறார். நெருக்கடியை உணர்ந்து கொண்டு விட்டாலும் ஹானால் தப்பிக்க முடியவில்லை. தனது துணைவியின் அறுவை சிகிச்சைக்கு முன்பே வேலையை இழந்து விடுகிறார். சொந்த வீட்டை விற்று வேறு வீட்டுக்கு குடியேறியுள்ளார். சிகிச்சைக்காக வாஷிங்டன் செல்வதற்கான செலவை நண்பர்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மார்பகப் புற்றுநோயால் அவதிப்படும் புர்சாக் என்ற பெண் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். வேலையில்லாதவர்களுக்கு கிடைக்கும் நிவாரணத்தொகையில் பாதிக்கு மேல் மருத்துவ செலவுக்கு போய் விடுகிறது. நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்களுக்கு உள்ள காப்
பீடு கொஞ்சம் கைகொடுத்தாலும் அந்தக்காப்பீடும் இன்னும் ஒரு ஆண்டுக்குத்தான் வரும் என்பதால் அடுத்து என்ன என்பது புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தனது நாற்பதுகளில் இருக்கும் அவர் 65 வயதுக்குப்பிறகுதான் அரசு தரும் மருத்துவ வசதிகளைப் பெற முடியும். நான் பயப்படத்துவங்கியுள்ளேன் என்று கூறும் புர்சாக்கின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்கிறது.

57 வயதாகும் டிரேக், தனது மார்பு இறுக்கமாகும் வரையில் ஆஸ்துமாவுக்கான மருந்து போடுவதைத் தவிர்க்கிறார். சில சமயங்களில் மருந்து போட்டுக்கொள்ளாமல் இருந்து விடவும் முயற்சிக்கிறார். நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவர் கடந்த ஆண்டு ஜூலையிலேயே வேலையிலிருந்து நீக்கப்பட்டார். தனது ஓய்வுக்கால நிதியிலிருந்து பணத்தை எடுக்கத் துவங்கிவிட்டார். ஏற்கெனவே மணிக்கட்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்
தில் இருந்த அவர், அதைச் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஒன்றரைக் கையோடு காலத்தை ஓட்டுவது என்று முடிவெடுத்துவிட்டேன் என்கிறார் டிரேக்.

இத்தகைய நெருக்கடியைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை குறைவானதல்ல. அமெரிக்கப் புற்றுநோய் மையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் என்று அதில் தெரியவந்தது. தாக்குப்பிடிக்க முடியாத செலவு என்பதுதான் இதற்குக்காரணமாக இருந்துள்ளது. மருத்துவ நலத்துறையை சீர்திருத்தம் செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உறுதி அளித்திருந்தார். ஆனால் எப்படி செய்வது என்பதில் பொதுக்கருத்து இதுவரை எட்டப்படவில்லை. இன்னும் பத்து ஆண்டுகளில் மருத்துவக்காப்பீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை6 கோடிக்கு மேல் உயரும் என்று ஆய்வொன்றில் வெளிப்பட்டுள்ளது. சொந்தக்கரங்களாலேயே குரல்வளையை நெரித்துக் கொள்ளும் வேலைதான் நடக்கிறது என்கிறார் பொருளாதார நிபுணர் ஒருவர்.