Wednesday, November 3, 2010

மருந்துகளும், குறைபாடுகளும்

டவானா வில்லியம்ஸ், சாப்பிடுவது, தலைமுடியை சீவி, பின்னிக் கொள்வது, டைப் ரைட்டரில் டைப் அடிப்பது என அனைத்து வேலைகளையும் தனது கால்விரல்களால்தான் செய்து கொள்கிறார். அவருக்கு வேறு வழியில்லை.

1960களில் உலகில் பிறந்த குழந்தைகளில் 12,000 பேருக்கு ஊனம். “தலிடோமைட் டிராஜடி” என மருத்துவ வரலாற்றில் அழைக்கப்படும் இது ரத்தக்குழாய்களை பாதித்து, கை, கால், கண்கள், சிறுநீரகத்தையும் பாதிக்கிறது.

1957ல் மேற்கு ஜெர்மானிய நிறுவனமான “க்ருனென்தால்” தூக்கமின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு தூங்க வைக்க “தலிடோமைட்” என்ற மருந்தை கண்டுபிடித்தது. விற்பனையும் செய்தது. எதேச்சையாக, அது வாந்தியை குணப்படுத்துமென கண்டுபிடிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி வருவதை தடுக்க கொடுக்கப்பட்டது. ஆனால், இதை சாப்பிட்ட தாய்மார்கள் பிரசவித்த குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. இதை தயாரித்த நிறுவனமான ‘க்ருனென்தால்’ எலிகள் மீது பரிசோதித்த பொழுது அபாயகரமான விளைவுகள் எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டது. ‘தலிடோமைட்’ கருவில் வளரும் குழந்தையை எப்படி பாதிக்கிறது என்பது புரியாமலேயே இருந்தது.

சமீபத்தில் (மார்ச் 12, 2010 சயன்ஸ் இதழ்) ஜப்பானிலுள்ள “டோக்கியோ இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி” வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், தலிடோமைட் மருந்தில் உள்ள செரிப்லான் (உநசநடெடிn) என்ற புரதம்தான் எலும்பு வளர்ச்சியை பாதிக்கிறது என தெரிவித்துள்ளது. ஆய்வாளர் ஹிரோஷி ஹண்டா, மீன்கள் மீது பரிசோதனை நடத்தியதில் தெரிய வந்த பின், கோழி குஞ்சுகள் மீதும் பரிசோதனை செய்ததில் அதே முடிவுக்கு வந்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சுவ்ரோ சட்டர்ஜி மற்றும் கே.பி.சந்திரசேகர் ஆகியோரும், இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

கர்ப்பம் தரித்த முதல் 5 வாரங்கள் மிகவும் முக்கியமானவை. கை, கால் வளரத் துவங்கும் இந்த சமயத்தில் தலிடோமைட் தாக்குதலால் பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்கிறது.

1962ல் தடை செய்யப்பட்ட இந்த மருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து மீண்டும் சந்தையில் விற்கப்படுகிறது. 2006ல் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, தலிடோமைட் மீதான தடையை நீக்கிவிட்டது. ஆனால் குஷ்டம், மைலோமா எனப்படும் ஒரு வகை புற்றுநோய்க்கு மருந்தாக கட்டுப்பாடுகளுடன் விநியோகிக்கப்படுகிறது.

2008ல் ஜப்பானிலும், புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்த இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2002ல் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி பெற்று “டாபர் இந்தியா” குஷ்டத்தை குணப்படுத்த இதை விற்று வருகிறது. பிரேசிலிலும், மீண்டும் இது உபயோகத்திற்கு வந்துள்ளது. மீண்டும் “தலிடோமைட் குழந்தைகள்” பற்றிய அறிவிப்பு வெளியாகிறது. 1960களில் எப்டிஏ அனுமதி இன்றியே கர்ப்பிணி பெண்களுக்கு இது தரப்பட்டது. டவானா வில்லியம்ஸின் தாயும் இதை உட்கொண்டவர்தான். புதிதாக ‘தலிடோமைட் குழந்தைகள்’ பற்றி தகவல் வருவதால், இதில் கவனம் தேவை.

மருத்துவத்துறை இதில் கவனமாக இல்லாவிடில், டவானா போன்று பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். “புற்றுநோய், குஷ்டம் போன்ற வியாதிகளை குணப்படுத்துவதால் அதன் எதிர்கால பயன்பாட்டை மேலும் ஆராய வேண்டியுள்ளது, என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆதாரம் : லைஃப் சயின்ஸ்

--ஆர்.சந்திரா

No comments: