Monday, August 30, 2010

கோடிக்கணக்கில் பசித்த வயிறுகள்; கோடிகளில் புரளும் பெரும் பணக்காரர்கள் பொருளாதார நிபுணர் வி.கே.ராமச்சந்திரன் குமுறல்

நாடு விடுதலையடைந்து 64வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போதும், ஏழை-எளிய உழைக்கும் மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் காங்கிரஸ் தலைமையிலான அரசோ, இந்திய முதலாளித்துவ கட்டமைப்போ கொண்டுவர முடியவில்லை என்று மேற்குவங்க திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் வி. கே. ராமச்சந்திரன் குற்றம்சாட்டினார்.

நாகர்கோவிலில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) இந்திய மாணவர் சங்கத் தின் மாநில மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய அவர் கூறியதாவது:

ஆகஸ்ட் 15 விடிந்தால் சுதந்திர தினம். வண்ண வண்ண பலூன்கள் பறக்க இருக்கின்றன. தில்லி செங்கோட்டை யில், பிரதமர் - ஒரு முறைகூட மக்களி டம் வாக்கு கேட்டு சென்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத பிரதமர் - கொடியேற்றுவார். இந்தியாவின் பொரு ளாதாரத்தை மேம்படுத்திவிட்டோம் என்று மீண்டும் ஒருமுறை முழங்குவார். 63 ஆண்டுகளுக்கு முன்பு நாடு விடு தலை அடைந்தபோது அன்றைய பிரதமர் நேரு கொடியேற்றி வைத்து பேசினார். சுதந்திரம் என்பது வறுமைக்கு முடிவு கட்டுவது, சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவது, எழுத்தறிவின்மைக்கு முடிவு கட்டுவது என்று சொன்னார். 63 ஆண்டு களுக்குப் பின்னர் இன்றும் இப்போதைய பிரதமர் நேருவின் அதே வார்த்தைகளை சொல்லப் போகிறார்.

63 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி யாளர்கள் இதையே சொல்லி வருகிறார்கள். ஆனால், இப்போது வரைக்கும் அவர்கள் அந்த இலக்கை எட்டவே இல்லை.

ஒரு முழுமையான மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்று மார்க்ஸ் சொல் கிறார், கலாச்சாரத்தில் உயர்ந்த விழு மியங்கள் கொண்டவராக, கல்வியறிவில் சிறந்தவராக என்றெல்லாம் அவர் பட்டிய லிடுகிறார். மனிதகுல வரலாற்றில், முழுமையான கல்வி - அனைவருக்கும் கல்வி அளிக்காத எந்தவொரு சமூகமும் முழுமை பெற்ற மனித சமூகமாக இருக்க முடியாது என்பதே அதன் அடிப்படை.

நமது தேசத்தின் கல்வி நிலைமை எப்படி இருக்கிறது?

1970களில் சென்னையில் நாங்கள் மாணவர்களாக இருந்தபோது, இந்திய மாணவர் சங்கத்தின் ஒரு பிரசுரத்தை தயாரிப்பதற்காக நாட்டில் எழுத்தறிவற் றோரின் நிலைமை குறித்து ஆராய்ந் தோம். அப்போது, சுதந்திரம் வாங்கும் போது இருந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட எழுத்தறிவற்றோரின் எண்ணிக்கை இருந்தது கண்டு அதிர்ந் தோம். இன்றைக்கும், எழுத்தறிவற் றோரின் எண்ணிக்கை, நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த மக்கள் தொகையை விட அதிகமாகவே இருக்கிறது.

அந்த காலகட்டத்தில் பள்ளி, கல் லூரிகளில் மாணவர் சங்கத்தில் உறுப்பி னர்களை சேர்க்க சென்ற போது ஏராள மான பள்ளிகளில் போதிய ஆசிரியர் இல்லை, ஆய்வுக்கூட வசதிகள் இல்லை என்று புகார்கள் வந்தன.

வேதியியல் கற்பிக்கும் ஆசிரியர், ஆய்வுக்கூடம் இல்லாததால் தனது சட்டைப்பையிலிருந்து பென்சிலை எடுத்துக்காட்டி இதை சோதனைக் குழாயாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கற்பனையில் பாடம் நடத்தினார்.

40 ஆண்டுகள் கடந்த பின்னர் இப் போது பல மாநிலங்களில் ஆய்வுக்கு செல்லும்போதும் கூட அறிவியல் ஆசிரி யர்கள் அப்போது போலவே கற்ப னையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

1980-ல் நான் ஆராய்ச்சி மாணவராக இருந்த போது இந்திய மாணவர் சங்கத் தின் ஒரு பட்டறையில் மகத்தான மக்கள் தலைவர் பி. சுந்தரய்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னார்: இந்திய சமூகத்தில் அடிப்படையான மாற்றம் ஏதும் ஏற்படுத்தப்படாதவரை, இன்னும் 50 ஆண்டுகள் கழித்துப் பார்த் தாலும் இந்தியக் குழந்தைகளில் பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி பெற்றவர் களின் எண்ணிக்கையை கூட உயர்த்த முடியாது என்றார். அப்போது நாங்கள் அதிர்ந்தோம். 2005 ம் ஆண்டு தேசிய குடும்ப நல சர்வே முடிவுகள் வந்த போது சுந்தரய்யாவின் வார்த்தைகள் எவ்வளவு நிதர்சனமானவை என்பதை உணர முடிந்தது. கிராமப்புற இந்தியாவில் கல்வி கற்றோரின் எண்ணிக்கையை பற்றிய ஆய்வு முடிவு அது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை பெற்ற இந்திய மக்களின் சராசரியை அந்த புள்ளி விபரங் களின் அடிப்படையில் கணக்கிட்டால் ஆண்களை பொறுத்தவரை வெறும் 2 ஆண்டு கல்வி மட்டுமே பெற்றிருக் கிறார்கள். பெண்களை எடுத்துக் கொண் டால் சராசரியாக ஒரு ஆண்டு கல்வி கூட பெறவில்லை. தலித் மக்க ளும் ஒரு ஆண்டு கல்வி கூட பெறவில்லை. அப்படியானால், 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் முற்றிலும் எழுத்தறி வற்றவர்கள் என்பதே பொருள்.

எனவே, இந்திய சமூகத்தில் அடிப் படையான மாற்றத்தைக் கொண்டு வராமல் இந்த நிலைமைகளில் மாற் றம் கொண்டுவர முடியாது.

இதற்கு தடையாக இருப்பவர்கள் யார்?

இந்தியா ஏழைகள் மிகுந்த நாடு. உலகிலேயே மிக மிக அதிகமான ஏழை கள் இருக்கும் நாடு. ஒட்டு மொத்த மக்கள் தொகையை கணக்கிட்டால் 65 கோடி மக்கள் போதிய உணவின்றி, போதிய சுகா தார வசதிகள் இன்றி, போதிய கல்வி யின்றி, அனைத்து விதத்திலும் வறுமை யின் பிடியில் சிக்கி நிற்கும் மக்கள். ஒரு நாளைக்கு 2 டாலர்களுக்கும் (சுமார் ரூ. 100) குறைவாக வருமானம் இருந்தால் அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்று உலகவங்கி வரையறை செய் துள்ளது.

இந்தியாவில் 83. 8 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 20 கூட செலவழிக்கும் திறன் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்ஜூன் சென் குப்தா குழு கூறுகிறது. அப்படியானால் இந்தியாவின் மிகப் பெருவாரியான மக்கள் மிகக் கொடிய வறு மையில் வாடுகிறார்கள் என்பதே பொருள்.

இவ்வளவு கொடிய வறுமையில் பெருவாரியான மக்கள் வாடும் இந்த தேசத்தில் தான் மிகப் பெரும் பணக்காரர் களும் பெருமுதலாளிகளும் வாழு கிறார்கள்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட விப ரங்களின்படி ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் பட்டிய லில் 52 இந்தியர்கள் இடம் பெற்றிருக் கிறார்கள்.

உலகளவில் முதல் 10 இடத்தை பிடித்த இந்திய பெரும் பணக்காரர்கள் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானி யும். மேற்கண்ட 52 பேரில் இடம் பெற் றுள்ள ஒரே தமிழர் கலைஞரின் பேரன் கலாநிதி மாறன்.

இந்த 52 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்தை கூட்டினால் தலை சுற்றுகிறது. 110 கோடி மக்களில் இந்த 52 பேரிடம் மட்டும் ரூ. 13 இலட்சத்து 80 ஆயிரம் கோடி செல்வம் குவிந்து கிடக்கிறது. இதை சாதாரணமான வட்டி விகிதத்தில் வங்கியில் போட்டால் கூட ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 கோடி வட்டிப் பணம் கிடைக்கும்.

இந்த வட்டிப் பணத்தை மட்டும் கொண்டு இந்தியாவில் வீடின்றி தவிக் கும் 2 கோடி விவசாயத் தொழிலாளர் களுக்கு நிரந்தரமான, வசதிகளோடு கூடிய வீடுகள் கட்டித்தர முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நாடு முழுவதும் அனைத்துக் கிராமங் களில் சகல வசதிகளும் கொண்ட சுகா தார மையங்கள், தாலுகா மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் போன்றவற்றை உருவாக்கு வதற்கு ரூ. 40 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும். அரசு அதற்கு பணமில்லை என்கிறது. ஆனால், இதைவிட 4 மடங்கு அதிகமான பணம் வெறும் 52 பணக்காரர் களின் கைகளில் புரளுகிறது.

ஒருபுறம் கோடிக்கணக்கில் பசித்த வயிறுகள்: மறு புறம் செல்வத்தில் புரளும் சில பெருமுதலாளிகள். இதுவே இன் றைய இந்தியா. 63 ஆண்டுகால சுதந் திரத்திற்குப் பின்னும் நீடிக்கும் இந்தியா.

இந்த நிலையை மாற்ற அடிப்படை யான சமூக மாற்றம் அவசியம். சமூக மாற்றத்திற்கான போராட்டம் என்பது வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட் டம், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டம் என அனைத்தையும் உள் ளடக்கிய ஒரு மகத்தான போர். இந்தப் போரின் இறுதி இலக்கு, மாணவர் சங்கத் தின் வெண் பதாகையில் பொறித்திருக் கிற சோஷலிசம் எனும் முழக்கம்.

இவ்வாறு வி.கே.ராமச்சந்திரன் பேசினார்.

அவரது உரையை எஸ். நூர்முகமது தமிழாக்கம் செய்தார்.