Tuesday, July 29, 2008

மக்களுக்கான மருந்துகள்

இன்றைய சூழலில் மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சுகாதாரம், நோய்தடுப்பு போன்றவற்றில் அனைத்து தரப்பு மக்கள் மீதும் எதிர்மறை தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட, பெரும்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


வளரும் நாடுகளில் உள்ள ஒருபகுதி மக்கள் குணப்படுத்த முடியாத எய்ட்ஸ், சர்க்கரை, இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தில் வசித்து வரும் மக்கள் எய்ட்ஸ் நோயின் விரைவான நோய் தொற்றை கண்டு அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக 2002-இல் எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்றவற்றால் 60 லட்சம் மக்கள் மடிந்தனர். குறிப்பாக மலேரியாவால் மடிந்தவர்கள் 10 லட்சம் பேர். இதில் பெரும்பான்மையானவர் குழந்தைகள்.

2002 உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின் படி மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் நிமோனியா, சின்னம்மை மற்றும் வயிற்று போக்கால் உயிரிழந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இருந்தாலும், அது மக்களை சென்றடைய வில்லை என்பது கசப்பான உண்மை.

நமது நாடும் இதற்கு விதிவிலக்காக இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக இந்திய நாட்டில் இன்றளவும் 65% மக்கள், மருத்துவரால் இன்றளவும் பெரும்பான்மையான குழந்தைகள் ஊட்டசத்திண்மையால் பாதிப்படைந்துள்ளனர். இன்றளவும் கர்ப்பகால மரணம் மற்றும் குழந்தை இறந்தே பிறப்பது பிறந்து சிறிது நேரத்தில் இறப்பது போன்றவை கணிசமான அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தேசிய நோய் தடுப்பு திட்டம் போன்றவைக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டாலும், போலியோ, காசநோய், மலேரியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உயிரிழப்பு பெருமளவு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

லாபம் கொழிக்கும் மருந்துத்துறை, மற்றும் செயல்பாடு


ஆயுத விற்பனை கச்சா எண்ணை விற்பனை போன்றவற்றிற்கு நிகராக லாபம் கொழிக்கும் துறை மருந்துத்துறை. கிட்டத்தட்ட, 106 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாடு, மருந்துக் கம்பெனிகளின் வேட்டைக்காடு. குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் என்பது பன்மடங்கு பெருகிகொண்டிருக்கிறது. உலக அளவில் முதல் 10 இடங்களை தக்க வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் ஆண்டு சராசரி 180 பில்லியன் அமெரிக்க டாலர்கள். மொத்த உலக மருந்து சந்தைகள் ஆண்டு சராசரி 375 பில்லியன் டாலர்கள். மேலும் உலக அளவில் முதல் 15 இடங்களை தக்க வைத்திருக்கும் நிறுவனங்களில் ஆண்டு சராசரி என்பது பல மத்திய தர நாடுகளின் ஆண்டு வருமானத்தை விட அதிகம்.

இந்திய ஏகபோக நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக தன்னுடைய லாபத்தை பெருக்கி கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இருப்பினும் மருந்துத்துறைக்கான ஏற்றுமதியில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் என்பது கற்பனைக்கெட்டாதது. குறிப்பாக வளர்ந்த (G8) 8 நாடுகளின் ஏற்றுமதி என்பது மொத்த எற்றுமதியில் 79.7மூ தக்க வைத்துள்ளது.

பொதுவாக, மருந்து உற்பத்திக்கான (எந்த வடிவிலிருந்தாலும்) செலவு என்பது மருந்தின் மொத்த விலையில் 150% முதல் 1500% வரையில் குறைவு என்பதாகும். மேலும் பெருவாரியான பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி பிரிவை அனைத்து நாடுகளிலும் (தங்களுடைய விற்பனைக்கு உட்பட்ட) ஏற்படுத்திக் கொள்வதில்லை. மாறாக தங்களுடைய பெயர் அங்கீகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பல்வேறு நாடுகளில் (மூன்றாம் உலக) நிதியை மட்டும் மூலதனம் செய்து, அந்தந்த நாடுகளிலுள்ள சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்களின் மூலம் உற்பத்தியை மேற்கொள்கின்றனர். இத்தகைய சிறு தொழில் உற்பத்தியாளர்களிடம் சிறந்த உற்பத்தி நடைமுறை (Good Manufacturing Practice, GMP) சான்றிதழ் இல்லை என்பது வேதனைக்குரிய உண்மை. இத்தகைய நடவடிக்கை மூலம் மருந்தின் தரம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. மேலும் பன்னாட்டு நிறுனங்களின் உற்பத்தி தளமாக பெரும்பான்மையான இந்திய நிறுவனங்கள் மாற்றப்பட்டு, புதிய மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடாமல் உள்ளனர். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெறப்பட்ட தங்களது மருந்துகளின் அடிப்படை மருந்துகளாக மாற்றி, தங்கள் நாட்டிற்கு எடுத்துச்சென்று, அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

ஆகவே, இத்தகைய நடவடிக்கையின் மூலம், இந்திய நாடு தன்னுடைய தேவைக்காக இறக்குமதியை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை. மேலும் உற்பத்தி என்பது மக்களின் தேவையை சார்ந்து இல்லை. இறக்குமதி சார்பு நிலை என்பது பன்னாட்டு நிறுவனங்கள் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை தாங்களே தீர்மானித்துக் கொண்டு நமது நாட்டை கொள்ளையடிப்பது தொடர்வது ஒருபுறம், மற்றொருபுறம் பெரும்பகுதியான மக்கள் இதை வாங்கும் சக்தியின்றி நோயின் கோரப்பசிக்கு ஆளாகின்றனர். மேலும் பொதுத்துறையின் மூலம் எண்பதுகளில் நாம் பெற்ற சயசார்பு (மருந்துதுறை) என்பதை மெதுவாக இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. தங்களுடைய லாபத்தை மேலும் அதிகரிக்கும் விதமான இந்திய ஏகபோக நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி பிரிவை ஹிமாச்சல் பிரதேசத்திற்கு மாறிவருகின்றன. இதன் மூலம் கலால் வரியில் 10 வருடம் விலக்கு அளிக்கப்படுகிறது.

மக்களும் மருந்தும் பொதுவாகவே மருந்துகள் விலை என்பது எட்டாக்கனியாகி கொண்டிருக்கும் வேலையிலே, நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இன்றைக்கு மக்கள் பயன்படுத்தும் மருந்துகளில் 80% மருந்துகள் உதவி சிகிச்சை (Supporting Theraphy)க்கானவை பெரும்பாலானவை அத்தியாவசியமற்ற மருந்துகள் பட்டியலில் வரக்கூடியவை.

ஒட்டுமொத்த மருந்துத்துறையின் இதன் பங்கு மிகப்பெரியவை. இத்தகைய மருந்துகள் இல்லாமலேயே நோயை குணப்படுத்த முடியும். நமது அன்றாட உணவில், ஊட்டச்சத்து பொருள்களை சேர்ப்பதன் மூலம் இக்குறைகளை களைய முடியும். ஆனால் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனங்கள், இத்தகைய அத்தியாவசிய மருந்துகள் விற்பனையிலேயே அதிக கவனம் செலுத்தி கோடி, கோடியாக லாபத்தை ஈட்டுகிறது. அத்;யாவசிய, உயிர்காக்கும் மருந்துகள் விலையோ கட்டுக்கடங்காமல் சென்று மக்களின் உயிருடன் விளையாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய மருந்துகளை சிறு தொழில் உற்பத்தியினர் மூலம் உற்பத்தியை மேற்கொள்வதால் தரம் என்பது கேள்விக்குறியாகிறது. மேலும் பல தரம் குறைந்த, மற்றும் போலிமருந்துகள் (SPURLOUS DRUGS) மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது. மேலும் பல மருந்துகள், மருத்துவரின் ஆலோசனை இன்றி, மக்கள் நேரடியாக மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்;கின்றனர்.

மேலும் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் நமது நாட்டில் தாராளமாக புழங்கிக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, நிமுசுலைடு, பிராமித்தையாசின், காக்சிப், கேட்டிபிளாக்ஸஸின் போன்றவை. மேலும் பல நாடுகள் விட்டமின் மாத்திரைகளை தனித்தனியாக, தேவையின் அடிப்படையில் விற்பனை செய்கிறது. குறிப்பாக விட்டமின் B12 குறைவு நோய் ஏற்பட்டால் நோயாளிக்கு அதைமட்டும் வழங்கப்படுகிறது. ஆனால் அதே நாடுகளை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் நமது இந்திய நாட்டில் விட்டமின் மருந்துகளை கலவையாக வழங்குகின்றனர்.

பெரும்பாலான மக்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளை பற்றி போதிய ஞானம் இல்லாமல் உள்ளனர். தற்பொழுது நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியில். அளவுக்கதிகமாக விட்டமின் மாத்திரைகளை உட்கொள்வது பக்க விலைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, ஆயுட்காலத்தையும் குறைக்கும். மேலும் நமது நாட்டில் போலி மருத்துவர்கள்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட நிறுவனங்கள், மருந்தை பரிந்துரை செய்கின்றனர். இவர்களால் பலமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளச்சந்தை, போலிமருந்து, முறையற்ற மருந்து விற்பனை

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி இந்திய மருந்துச் சந்தையில் 40% உயிருக்கு ஊறு விளைவிக்கக்கூடிய போலி மருந்துகள். பல சிறுதொழில் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்திக்கான அனுமதி பெறாமலே, மருந்துகளை உற்பத்தி செய்து, விற்பனைக்கு விடுகிறது. மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களின், சிறுதொழில் உற்பத்தி பிரிவு, அந்த நிர்வாகங்களுக்கு தெரியாமல் அளவுக்கதிகமாக அதே மருந்துகளை உற்பத்தி செய்து, விற்பனைக்கு விடுகிறது.

மேலும் கள்ளச்சந்தை (மருந்து துறையில்) என்பது வித்தியாசமான முறையில் நடைபெறுகிறது. மருந்துத் துறையில் கள்ளச்சந்தை என்பது கூடுதல் உற்பத்தியை கணக்கில் காட்டாமல், அதற்கான உற்பத்திவரி, சேவை வரி போன்றவற்றை செலுத்தாமல் நேரடியாக சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறது. மருந்துக் கம்பெனி நிர்வாகங்களே நேரடியாக இச்செயலில் ஈடுபடுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, மருந்துக்கட்டுபாட்டு துறை அதிகாரிகளுக்கு மருந்து நிறுவனங்கள் மூலம் பல வசதிகள் செய்துத் தரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இன்றைய மருந்து விற்பனை என்பது முழு அளவில் முறையற்ற நிலையில் உள்ளது. லாபத்தை அதிகரிக்கும் நோக்குடன், மருத்துவர்களிடம் மருந்தை பற்றிய முழுத்தகவல்களை தெரிவிப்பதில்லை.

மேலும் தங்களுடைய மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்களுக்கு, கார், இலவச வெளிநாட்டு பயணம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை வழங்கி தங்கள் வயப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் துரதிஷ்டவசமாக ஒரு சில மருத்துவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். இவர்கள் மக்களுக்கு தேவையற்ற மருந்துகளை கூட பரிந்துரைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேலும் மருந்து தேக்கி வைத்தல், அனுப்புதல், மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் போன்றவற்றிற்கு கூடுதலாக தள்ளுபடி விற்பனை செய்கின்றனர். இந்த தள்ளுபடியால் மக்களுக்கு எந்த வித பயனுமில்லை.

துறை சார்ந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக மருந்துத்துறை நிர்வாகங்களின் கூட்டமைப்புகளான OPPI, IDMA போன்றவை இத்தகைய முறையற்ற விற்பனை முறையை கையாள மாட்டோம் எனக்கூறினாலும், இத்தைகைய நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. மேலும் மருத்துவ கவுன்சிலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு துணை போவதில்லை என அறிவித்திருக்கிறது. மேலும் இத்துறை சார்ந்த தொழிலாளர்களால் நிறுவனங்களின் கள்ளச்சந்தை விற்பனை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சன்பார்மா போன்ற நிறுவனம் காலாவதியான மருந்துகளின் அச்சடிக்கப்பட்ட மேலுறையை மட்டும் மாற்றி விட்டு மறு விற்பனைக்கு ஏற்பாடு செய்தது.

மேலும் சன்பார்மா போன்ற நிறுவனங்கள் பெட்ரோசோல் என்ற கேன்சர்கான மருந்தை மகப்பேறிண்மைக்கான மருந்தாக பயன்;படுத்துகிறது. மேலும் ஒக்கார்ட் என்ற நிறுவனம் நீரிழிவு நோயிற்கான இன்சூலின் என்ற மருந்து, அதன் பெயர் ஓசூலின். இந்த ஓசுலின் ஊசியில் மருந்திற்து பதிலாக, வெறும் தண்ணியை நிரப்பி விற்பனை செய்தது கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோடின் தயாரிப்பு இருமல் மருந்துகள், தவறான முறையில் போதை பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஃபைசர் கம்பெனியினுடைய COREX, மற்றும் நிக்கோலஸ் பிரமல் கம்பெனியினுடைய Phensyolylபோன்றவை இத்தகைய மருந்துகள் தான். பென்சிறல் என்ற மருந்து, நிர்வாகமே பங்களாதேஷிக்கு கடத்த முயற்ச்சிக்கும் போது, எல்லை பாதுகாப்பு படைவீரர்களால் பிடிக்கப்பட்டது.

மருந்து விலை

மருந்துகளின் விலை குறித்து பிரணாப்சென் (2005) கமிட்டியின் பரிந்துகைள் பல நல்லவைகளாகவுதம் ஏற்புடையதாகவும் இருந்தது. ஆனால் மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதற்கு மேற்கொண்ட முறை மருந்து கம்பெனிகளிடம் சோரம் போனதை வெளிப்படுத்துகிறது.

மருந்து விலையை நிர்ணயிக்கும் போது, ஒரே மருந்தை பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யும் மூன்று கம்பெனிகளின் விலையை சராசரி எடுத்து கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையால் மக்களுக்கு பெரிய அளவில் பலனை தராது. பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளாக மாற்றப்படுவதால், மக்கள் தேவைக்கான மருந்தின் விலையை கட்டுப்படுத்தும் சூழ்நிலை இந்தியாவில் இல்லை. மேலும் மருந்து கம்பெனிகளே, மருந்தின் விலையை கட்டுபடுத்துவது என்பது ஏற்புடையதல்ல.

தற்போது 11 மருந்துக் கம்பெனிகள் மூலம் 886 மருந்துகளின் விலையை குறைப்பதறகான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு கூறியது. இந்த 886 மருந்துகள் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் விற்;கக்கூடிய மருந்துகள் அல்ல. மேலும் மருந்துக் கம்பெனிகளும் இந்த மருந்துகளை விற்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஆகவே இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை உணரவேண்டும்.

முந்தைய பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் (DPCO) கீழ் இருந்து அனைத்து மருந்துகளையும் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியது பெருமளவில் மருந்து விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது. தற்போதைய மத்திய அரசு மீண்டும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் 74 மருந்துகளை கொண்டுவந்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மேலும் 400 மருந்துகளின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பரிந்துரைத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உயிர்காக்கும் அத்யாவசிய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் கொண்டுவர பரிந்துரைத்தது.
இச்சூழலில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் 2005 சனவரியில் அதிகபட்ச விலையின் பேரில் கலால் வரி அமுலாக்கத்தை அறிவித்தார். உற்பத்தி அடிப்படையில் கலால் வரி நிர்ணயம் என்பது விலையை குறைக்க உதவும் அவ்வாறு மாற்றுவதற்கு மாறாக கலால் வரியை 16%மாக உயர்த்தியது மேலும் மக்கள் மீதான வரிச்சுமையை அதிகரிக்கும்.

மக்களின் தேவையும் அரசின் உடனடி கட்டமையும்

1. தேசிய நோய் தடுப்புத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாயை முறையாக மக்களை சென்றடையும் வகையில் முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

2. ரூபாய் 10000 கோடி முதலீட்டில் வகுக்கப்பட்ட ‘தேசிய கிராம சுகாதார செயல்முறை திட்டம்’ முழுமையாக அதன் இலக்கை எட்டும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

3. ஆரம்ப சுகாதார மையங்கள் தனியார் மயமாக்கப்படுவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும்.

4. மருந்துகளின் விலை குறைக்கப்பட வேண்டும்.

5. அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் ‘கட்டாய விலை கட்டுப்பாட்டின் கீழ் முறைப்படுத்தப்பட வேண்டும்.

6. மருந்து நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படும் மருந்துகளின் விலையில் ஏற்படும் முறைகேடுகளை களைவதற்கும், விற்பனை வரி, மற்றும் கலால் வரி நிர்ணயம் செய்வதில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்கும் விசாரனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

7. மாற்று மருந்துகள் உள்நாட்டிலேயே கிடைக்கும் பொழுது அத்தகைய மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்து தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

8. பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

9. மருந்து நிறுவனங்கள், அடிப்படை நிலையிலிருந்து பெரும்பான்மையான உற்பத்தியினை உள்நாட்டிலேயே மேற்கொள்ள வலியுறுத்தப்பட வேண்டும்.

10. மருந்து நிறுவனங்கள், இல்லாத மருத்துவமனைகளின் பெயரில் பில் செய்து, கள்ளச் சந்தையில் மருந்துகளை விற்பனை செய்வதைத் தடுக்க CBI விசாரனை அமைக்கப்பட வேண்டும்.

11. மருந்து நிறுவனங்களால் செய்யப்படும்; முறையற்ற மருந்து விற்பனையைத் தடுக்க இரசாயனத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக்குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

12. போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க விசாரணை அமைக்கப்பட வேண்டும்.

3 comments:

தமிழநம்பி said...

பயன்மிக்க பதிவு.
பலரும் சுரண்டிக் கொழுக்கும் மருந்துத் துறையை நெறிமுறைப்படுத்தவும் தவறிழைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், போலியான மருந்துகள், தீய விளைவு தரும் மருந்துகள் போன்ற வற்றிலிருந் தெல்லாம் மக்களைக் காக்கவும் விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் உருப்படியான உறுதியான நடவடிக்கை இல்லை.

நெகிழ்ச்சியற்ற ஊழல் நெருங்க முடியாத
வலிமையான நடவடிக்கைகள் மக்களின் உயிரைக்காக்க இத்துறையில் கட்டாயமாக விரைவில் எடுத்தாக வேண்டும்.

vetriselvan said...

ungal blog kanndu manmagizhndhen.
ivatrai eppadi thamizhil padhivu seivadhu endru enku solla mudiyuma???

விடுதலை said...

நன்பர் வெற்றிக்கு உங்கள் கருத்துக்கு நன்றிகள்

உங்களுக்கு பாமினி தெரிந்தால் இங்கு சென்று உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்

http://www.suratha.com/unicode.htm