Friday, December 26, 2008

தடுப்பு மருந்து உற்பத்தியை துவக்குக

மத்திய அரசு பொதுத்துறை மருந்து உற் பத்தி நிறுவனங்களில் தடுப்பு மருந்து உற்பத் தியை நிறுத்தி வைத்துள்ளது. இதை உடனடி யாக ரத்து செய்து மீண்டும் உற்பத்தியை துவங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.ரங்கராஜன், பிரதமரி டம் கடந்த வாரம் மனு அளித்தார். அந்த மனு வில் கூறப் பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டி டியூட் நிறுவனம் 1907ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஒரு பிரிட்டிஷ் உயரதிகாரி யின் மனைவி நாய்கடித்து இறந்து போன தைத் தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த பணக்கார பிரமுகர் ஒருவர் கர்சன் பிரபுவுக்கு பரிசாக அளித்ததே இந்த நிறுவனம். அந்த காலத்தில் வட இந்தியாவில் இமாச்சலப்பிர தேசத்தில் கசௌலி என்னும் இடத்தில் உற் பத்தி செய்யப்பட்டதை தவிர வேறு எங்கும் நாய்க்கடிக்கான மருந்து உற்பத்தி செய்யப்பட வில்லை. அப்போது இருந்து குன்னூரிலும் இந்த மருந்து உற்பத்தி துவங்கியது. 1977ம் ஆண்டு முதல் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் ஒரு சுயாட்சி நிறுவனமாக செயல்பட்டு வந்த பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், அப்போது பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை உற் பத்தி செய்வதில் நவீன மருத்துவத் தொழில் நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்க லைக்கழகம், மற்றும் கோவை பாரதியார் பல் கலைக்கழகம் ஆகியவற்றில் எம்.டி. மற்றும் பிஎச்டி ஆராய்ச்சிகளுக்கான நிறுவனமாக வும் இது இருக்கிறது. அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கிய இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவிலேயே வெறி நாய்க் கடிக்கான மருந்தை கண்டுபிடித்து உற்பத்தி செய்தது. இங்குள்ள நூலகம் தடுப்பு மருந்து உற்பத்தித்தொடர்பாக ஆராய்ச்சியின் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவுச்சுரங்கம் ஆகும்.

ஆனால், இவ்வளவு மிகச்சிறந்த நிறு வனத்தில் உற்பத்தி முறை சரியில்லை என்று ஒருசாதாரண காரணத்தைக் கூறி மத்திய சுகாதாரத்துறை திடீரென்று உற்பத்தியை நிறுத்தியிருக்கிறது.

இதே போல சென்னை கிண்டியில் பி.சி.ஜி. தடுப்பு மருந்து ஆய்வகம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் நாடு முழுவதும் ஒட்டுமொத்த தடுப்பு மருந்து தேவைகளையும் பூர்த்தி செய் கிற நிறுவனமாக உள்ளது. ஆனால் இங்கும் திடீரென்று அரசு உற்பத்தியை நிறுத்திவிட் டது. இந்திய மருந்துக்கட்டுப்பாட்டு தலை மை அதிகாரி, இந்நிறுவனத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகப்படுத்த வேண் டும் என்றும் எதிர்காலத்தில் மருத்துவக் கரு விகளுக்கான ஆராய்ச்சி மையமாக இது உரு வாக வேண்டும் என்றும் பரிந்துரை செய்தி ருந்தும்கூட உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மற்றும் ஒரு பொதுத்துறை நிறுவனமான இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கசௌலி யில் அமைந்துள்ள தி சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், தென்கிழக்கு ஆசியாவிலே யே மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து உற்பத்தி செய்கிற ஒரே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 மே மாதம் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநரின் தலைமை யில் அமைக்கப்பட்டிருந்த குழுவானது, மேற் கண்ட மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு மருந் தை உலகத்தரத்தில் உற்பத்தி செய்வதற்கு கசௌலி ஆராய்ச்சி நிறுவனத்திலும், குன்னூ ரில் உள்ள பாஸ்டியர் நிறுவனத்திலும் ஏற்பா டுகள் உள்ளன என்றும் இவ்விரண்டு இடங் களிலும் உற்பத்தி செய்யலாம் என்றும் பரிந்து ரைத்தது. ஆனால் இங்கும் கூட உற்பத்தியை நிறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு மாறாக தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் ரூ.400 கோடி செலவில் ஒரு தடுப்பு மருந்து பூங்காவை உருவாக்கு வது என்று சுகாதார அமைச்சகம் முடிவு செய் துள்ளது. இது 2012ம் ஆண்டில் செயல்பாட் டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேவையான தடுப்பு மருந்தை எப்படிப் பெறுவது என்று சுகாதார அமைச்சகம் இது வரையிலும் உரிய விளக்கம் வெளியிடவில் லை. ஏற்கெனவே சிறப்பான முறையில் இயங்கிவரும் இந்த நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி அல்லது ரூ. 60 கோடி கொடுத்து மேம் படுத்துவதற்கு தயங்கும் அமைச்சகம். மிகப் பெரும் அளவில் செலவிட முயற்சி செய்வது ஏன்?

 டி.கே.ரங்கராஜன்

Thursday, August 21, 2008

விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் பன்னாட்டுக் கம்பெனிகள்தான்

விவசாயத் துறையில் பன்னாட்டு பெரு முதலாளித்துவ கம்பெனிகள் நடத்தும் தலையீடுகள்தான் நாட்டில் விவசா யிகள் தற்கொலை அதிகரிக்க காரண மாகும் என்று பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவா கூறினார்.


‘இந்தோ-யுஎஸ் நாலேஜ் இனி சியேட்டிவ் ஆன்புட் செக்யூரிட்டி’ என்ற தலைப்பில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசினார்.

விவசாயத் துறையில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு விவசாயிகளுக்கு பயனளிக்காது. பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும் ரசாயன உரம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும்தான் பயனளிக்கும். ரசாயன உரத் தயாரிப்புக் கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மானியமாக வழங்கும் அரசு ஏழை விவசாயிகளைப் புறக்கணிக்கிறது. இந்திய- அமெரிக்க ஒத்துழைப்பின் மூலம் அமெரிக்கா விரும்புவது எரிசக்தி பாதுகாப்பு அல்ல; அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பே ஆகும். அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்குப் பின்னாலும் கூட விவசாயத் துறையில் அதன் முதலீட்டு நோக்கம் மறைந்திருக்கிறது. இந்திய விவசாயத்துறையை முற்றிலுமாக பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தாரைவார்க்கும் கொள்கையைத்தான் மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி எழவேண்டும் என்றும் வந்தனா சிவா கூறினார்.

பணவீக்க கணக்கீடு மோசடி

பணவீக்கம் என்பது பொதுவாக பொருட்களின் தேவை அதிகரிப்பதாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.

நமது நாட்டில் பண வீக்கத்தைக் கணிக்கும் முறையிலும் மோசடிதான் உள்ளது. பொதுவாக மொத்த விலைக் குறியீட்டெண்ணைத்தான் பணவீக்கத்திற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்கிறார்களே தவிர சில்லரை விலையை அல்ல. மொத்த விலைக்கும் சில்லரை விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

நாட்டு மக்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோருக்கு வருவாயில் 70 சதவிகிதம் உணவுக்கே செலவாகிறது. ஆனால் பணவீக்கத்திற்கான கணக்கில் உணவுப் பொருளை 22 சதவிகிதம் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். எஞ்சிய 78 சதவீதம் ஆடம்பரப்பொருள் முதல் கட்டுமானப் பொருள் வரை அடக்கம்.

உண்மையான கணக்குப் பார்த்தால் இவர்கள் சொல்லும் 11.05 என்ற சதவிகித கணக்கு மோசடியானது. பணவீக்கம் குறைந்தது 3மடங்காவது அதிகம் இருக்கும்.

உதாரணத்திற்கு சொல்வதென்றால் மிகமிகக் குறைந்த விலையில் கிடைத்த பிஸ்கட் பாக்கெட் 3 ரூபாயாக இருந்தது நான்கு ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 33 சதவிகித உயர்வல்லவா! இத்தகைய உயர்வுகளை மறைத்துக் கொடுக்கப்படும் கணக்குதான் இன்றைய பணவீக்க கணக்கு.

நசுக்கப்பட்ட இனத்தின் இரத்தசோகை

உலகிலுள்ள மக்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டியது அவசியம். ஆனால் நமக்கு சமயத்தில் காய்ச்சல், சளி, உடல் சோர்வு, பலவித நோய்கள் வந்துவிடுகின்றன. அச்சமயத்தில் நாம் மருத்துவரை நாடுகிறோம். அவர் நம்மை முதலில் நாக்கை நீட்டச் சொல்கிறார். விரல் நகங்களைக் காட்டச் சொல்லி, கண் இமைக்குள் எட்டிப்பார்த்து நம்மை பரிசோதிக்கிறார். இது எதற்காக? உடலின் இப்பகுதிகள், பார்வைக்கு நல்ல இளம் சிவப்புடன் இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாய், உடல் நலத்துடன் இருக்கிறீர்கள் என்று பொருள். இவை இலேசாக வெளுப்பாகத் தெரிந்தால், உங்களின் உடலில் போதுமான இரத்தம் இல்லை என மருத்துவர் கூறுவார்.

இரத்தசோகை.. என்றால்..!

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவே இரத்த சோகை எனப்படுகிறது. சிவப்பணுக்கள் அளவுக்கு அதிகமாய் அழிவதாலும் (சிவப்பணுவின் வாழ் நாள் 120 நாட்கள்), அதிகமான இரத்தப் போக்கினாலும், போதுமான அளவு இரத்த செல்கள் உற்பத்தியாகாததாலும் இரத்த சோகை உண்டாகிறது. அதுமட்டுமின்றி சத்துக் குறைவான உணவாலும், சிலவகைப் புற்றுநோய்களாலும், சில பாரம்பரியப் பிரச்சனைகளாலும், சில மருந்துகளாலும் கூட இரத்த சோகை உருவாகலாம். இரத்த சோகை பொது வாக எல்லாக் குழந்தைகட்கும் வரும் நோய்தான் இதன் முக்கியக் காரணி உணவில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான்!

இரத்தசோகை... வரலாறு...!

உலகில் 400 வகையான இரத்த சோகை உண்டு. உல கின் போலீஸ்காரன்,. பணக்கார நாடு எனக்கருதப்படும் அமெரிக்காவிலும் கூட இரத்த சோகை காணப்படுகிறது. அங்கே கருவுற்ற பெண்களில் 20 சதம் பேருக்கும், ஆண் களில் 2 சதம் பேருக்கும் இரத்த சோகை உண்டு. முதன் முதலில் இரத்த சோகை பற்றி அறியப்பட்டது கி.மு. 1500 ஆண்டுகட்குமுன் ஐரோப்பாவில்தான். இதனைப்பற்றிய தகவல் பாப்பிரஸ் மரப்பட்டைகளில் காணப்படுகிறது. அனீ மியா என்ற கிரேக்க சொல்லுக்கு, இரத்தம் இல் லாத என்று பொருள்

இரத்த சோகையில் சோகமான இந்தியா...!

இந்தியாவில் பொதுவாக பெண்களிடமும், குழந்தை களிடமும் அதிகமான இரத்த சோகை உள்ளது. இந்தியா வில் 59 சதம் பேருக்கு இரத்த சோகை இருப்பதாக கணக் கெடுப்பு கூறுகிறது. சமூக பொருளாதாரச்சூழல், தாயின் கல்வித்தரம், பிறந்த குழந்தையின் எடை, குழந்தையுடன் உள்ள சகோதரர்களின் எண்ணிக்கை, சத்துக்குறைவான உணவு போன்றவையே இரத்த சோகைக்கான காரணி களாகின்றன. உலகம் முழுவதிலும் சுமார் 2,000,000 மக்கள், குறிப்பாக பெண்கள் இரும்புச்சத்து குறைவாக வாழ்கின்றனர். வளர்முக நாடுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கிறது. காரணம் என்னவெனில், அங்கு நிலவும் வறுமை, உணவு போதாமை, சில நோய்கள், கருவுற்ற மற்றும் பாலூட்டும் காலத்தில் உடல்நலக் கவனிப்பு போதாமையால் பருவ வயதினரில் பெரும்பாலோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் 27 சதமும், வளர்ந்த நாடுகளில் 6 சதமும் பருவ வயதினருக்கு இரத்த சோகை இருக்கிறது.

உலகில் முதன்முதலில் கருவுறும் பெண்களில் 25 சதம் பேருக்கு இரத்த சோகை உள்ளது. வளர்முக நாடு களில் இனப்பெருக்க/குழந்தைபெறும் வயதில் உள்ள பெண்களில் 47 சதவீதத்தினருக்கும், கருவுற்றவர்களில் 59 சதம் பெண்களுக்கும் இரத்த சோகை காணப்படுகிறது.

இந்தியாவில் 1997களில் நடத்திய கணக்கெடுப்புப்படி 12-18 வயதுள்ள கிராமப்புற பெண்களுக்கு பரவலாக இரத்தசோகை காணப்படுகிறது. இவர்களில் பள்ளிக்கு செல்லும் பெண்களில் 82.9 சதம் பேருக்கும், பள்ளி செல்லாதவர்களில் 92.7 சதம் பேருக்கும் இரத்த சோகை உள்ளது. பொதுவாக இந்தியாவில் 85சதவீதம் மக்களுக்கு இரத்த சோகை உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000,000 பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன. தினந்தோறும் 2500 பெண் குழந்தைகள் புவியைவிட்டு மறைந்து போகின்றனர். இளந்தாய்மார்கள் உலகைவிட்டு செல்லக் காரணமும் இரத்த சோகைதான். உருவான கரு இறப்பதும், மகப்பேறின் போது தாய்மடிவதும் வளர்முக நாடுகளில்தான் அதிகம்.

சோகையின் சோகமான காரணிகள்..!

இந்தியாவில் 13-19 வயது கிராமப் பெண்களிடம் எடுத்த கணக்கெடுப்புப்படி கீழ்க்கண்ட தகவல்கள் சேகரிக் கப்பட்டுள்ளன. ஹரியானா-37 சதம், இராஜஸ்தான் 73 சதம், மும்பையின் நகர்ப்புற குடிசைவாசிகள் 63.5 சதம், குஜராத் 63 சதம், தமிழ்நாடு 53.7 சதம் என உள்ளது. வடஇந்தியாவில் 16-70 வயதுள்ளவர்களில் ஆண், பெண் இருபாலருக்கும் இரத்தசோகை 47.9சதம் காணப்படுகிறது. ஆண்கள் 50 சதம், பெண்கள் 44.3 சதம், இந்தியாவில் எல்லாப் பெண்களிடமும் முக்கியமாக கருவுற்ற பெண் களிடம் 42 சதம் இரத்த சோகை பாதிப்பு உள்ளது. இது நகர்ப்புற பெண்களைவிட, கிராமப்பகுதி பெண்களிடம் அதிகமாக உள்ளது. குறைந்த வருமானம், குறைவான உணவு, சத்துணவு இன்மை, கல்வியின்மையே இதன் காரணியாக அமைகிறது. இதனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தை எடை குறைவாக இருக்கிறது. உரிய காலத் திற்கு முன் பிறக்கிறது பிறந்தவுடன் மரிக்கிறது. உயிர் வாழ்ந்தாலும் அனைத்து வகை வளர்ச்சியிலும் குறை பாடாகவே வளர்கிறது.

சென்னையின் நிலை!

சென்னை மாநகராட்சி துவக்கப் பள்ளியின் உணவு நிலைமை மற்றும் நோய்த் தொடர்பாகத் தகவல் திரட்டப்பட்டது. உணவு போதாத குழந்தைகள் 64.4 சதம், எடைகுறைவானவை 58 சதம், இரத்த சோகை 33 சதம் என தெரிகிறது. 6-59 மாத இந்தியக் குழந்தைகளிடம் 2005-2006ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 69.5 சதம் குழந்தைகள் இரத்தசோகையுடன் இருப்பது தெரியவந்தது. இதில் நகர்ப்புறக் குழந்தைகள் 63 சதம், கிராமப்புற குழந்தைகள் 71.5 சதம், பள்ளி செல்லும் குழந்தைகளிடம் உள்ள இரும்புச்சத்து பற்றாக்குறை குழந்தைகளின் பழக்கவழக்கங்களையும், மன வளர்ச்சி யையும், கல்வியில் நாட்டத்தையும், அறிவு வளர்ச்சி யையும் நிறையவே பாதிக்கிறது.


கேரளா-ரோல் மாடல்

இந்தியாவில் கேரள மாநிலம் கல்வியறிவில் உயர்ந்த நிலை வகிப்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவில் இரத்தசோகை குறைவாக உள்ள மாநிலமும் கேரளாதான். 11.4 சதம் மட்டுமே. குறைந்த சத்துணவு பெறுபவர்கள் 16.3 சதம், மாமிசம் உண்பவர்கள் 12.7 சதம், காய்கறி உணவு உட்கொள்பவர்களிடம் 9.27 சதம் மட்டுமே இரத்த சோகை உள்ளது. கேரளாவில் இரத்தசோகை குறைவாக இருப்பதற் கான காரணம் கல்வியறிவும், சமூகப் பொருளாதார அறிவியல் விழிப்புணர்வும் தான்.

இரத்தசோகை வராமல் தடுக்க!

* கருவுற்றதிலிருந்து தாய் சத்தான, பச்சை காய்கறிகள் உள்ள உணவு உட்கொள்ளுதல்

* பிறந்தவுடன் முதல் மூன்று மாதம் குழந்தையின் வாழ்வில் முக்கியம். உடல், மன, எலும்பு வளர்ச்சிக்குத் தாய்ப்பால் தரவேண்டும்.

* ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மட்டுமே இரும்புச்சத்துக்கு போதாது. இரும்புச்சத்து அதிகம் உள்ள மேல் உணவு தரவேண்டும்.

* குழந்தை பெரிதானதும் தானியம், பருப்பு வகைகள், முட்டை கரு, தக்காளி, மீன், பச்சைக் காய்கறிகள், கீரை உணவு அதிகம் தருவது அவசியம்.

இன்றைய தேவை

இரும்புச்சத்து பற்றாக்குறையான இரத்த சோகையின் முக்கிய கரு குடும்பத்தின், சமூக, பொருளாதார, கல்விச் சூழல்தான். இது பெண்களின் உடல் நிலையைத்தான் இன்றைய சமூக சூழலில் பெரிதும் பாதிக்கிறது. எனவே அரசும் இதனை உணர்ந்து மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் தருவதுடன், மருத்துவ முகாம்களும் நடத்த வேண்டும். உடல் நலம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும். இவை இரண்டும் இரண்டறக் கலந்த கொள்கையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும். கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் அதிக இரும்புச் சத்து எடுத்துக் கொள்ளச் சொல்லி தகவல் தொடர்பு சாதனங்களை அடிக்கடி அரசு பயன்படுத்த வேண் டும். இதை மக்களும், அரசும், சமூக கண்காணிப் பாளர்களும் கவனத்தில் கொள்வது காலத்தின் கட்டாயம்.

நன்றி -பேராசிரியர் சோ.மோகனா

Saturday, August 2, 2008

குழந்தைகளின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்

நோய்க்கு சிகிச்சை அளிப்பதைவிட நோய்த்தடுப்பே சிறந்தது என்ற நோக்கத்துடன் தேசிய நோய்த்தடுப்பு திட்டம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பிறகு அது விரிவுபடுத்தப்பட்ட நோய்த்தடுப்பு திட்டம் (EPI), என்று மாற்றப்பட்டு நம் நாட்டில் அமலாக்கப்பட்டு இலவசமாக நோய்த் தடுப்பு மருந்துகளை வழங்கி வந்தது. பிறகு முழுமையாக்கப்பட்ட நோய்த்தடுப்பு திட்டம் (UIP) என்று மாற்றப்பட்டு மேலும் கூடுதலாக நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை பிறந்தவுடன் துவங்கி 9 மாதத்திற்குள் பலவிதமான நோய்த்தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகின்றன.

அரசு நீண்டகாலமாக குழந்தைகளுக்கு இலவசமாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கிவருகிறது. தொண்டை அடைப்பான், காசநோய், கக்குவான், இருமல், கர்ப்பகாலங்களில் ஏற்படும் ரனஜன்னி, மூளைக்காய்ச்சல், இளம்பிள்ளைவாதம் போன்ற கொடிய நோய்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒரு ஆண்டில் பிறக்கும் சுமார் 2.60 கோடி குழந்தைகளுக்கும் புதுவையில் 25 ஆயிரம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நோய்த்தடுப்பு மருந்ததுகள் 80%-ம் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டுவந்தது. சென்னை கின்டியில் உள்ள பி.சி.ஜி.யூனிட், குன்னுரில் உள்ள பாஸ்டியர் யூனிட், இமாச்சலபிரதேசத்திpல் உள்ள கசௌலி ஆய்வு மையம் ஆகிய 3 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களிலும் இவ்வாண்டு ஜனவரி 15 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரனமாக பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மெல்ல மெல்ல இலவச தடுப்பூசித் திட்டம் கைவிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் அபாயம் உருவாகி வருகிறது. 2000-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சுகாதார வசதி வழங்கிட வேண்டும் என்ற சர்வதேச மாநாட்டின் முடிவை அமலாக்குவதற்கு மாறாக தடுப்பூசி மருந்துக்கே கட்டணம் என்ற நிலை ஏற்படும் அயாயம் உருவாகி உள்ளது.

இன்றைய சூழலில் மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சுகாதாரம், நோய்த்தடுப்பு போன்றவற்றில் அனைத்து தரப்பு மக்கள் மீதும் எதிர்மறை தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட, பெரும்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இந்திய நாட்டில் இன்றளவும் 65% மக்கள், மருத்துவரால் இன்றளவும் பெரும்பான்மையான குழந்தைகள் ஊட்டசத்தின்மையால் பாதிப்படைந்துள்ளனர். இன்றளவும் கர்ப்பக்கால மரணம் மற்றும் குழந்தை இறந்தே பிறப்பது, பிறந்து சிறிது நேரத்தில் இறப்பது போன்றவை கணிசமான அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது தேசிய நோய் தடுப்பு திட்டம் போன்றவைக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டாலும், போலியோ, காசநோய், மலேரியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உயிரிழப்பு பெருமளவு தொடர்ந்து கொண்டிருக்கிறது

மருந்து உற்பத்திக்கான (எந்த வடிவிலிருந்தாலும்) செலவு என்பது மருந்தின் மொத்த விலையில் 150% முதல் 500% வரையில் குறைவு என்பதாகும். இந்த அடிப்படையில் குறைந்த விலையில் உற்பத்தி செய்துவந்த பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தம் என்பது, நேரடியாக இலவச நோய்த்தடுப்புதிட்டத்தை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இதற்கு எதிரான எல்லா நடவடிக்கையை ஆதரிப்போம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ள இலவச தடுப்பூசி திட்டத்தை பாதுகாப்போம். குழந்தைகளின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்.

Tuesday, July 29, 2008

மக்களுக்கான மருந்துகள்

இன்றைய சூழலில் மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சுகாதாரம், நோய்தடுப்பு போன்றவற்றில் அனைத்து தரப்பு மக்கள் மீதும் எதிர்மறை தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட, பெரும்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


வளரும் நாடுகளில் உள்ள ஒருபகுதி மக்கள் குணப்படுத்த முடியாத எய்ட்ஸ், சர்க்கரை, இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தில் வசித்து வரும் மக்கள் எய்ட்ஸ் நோயின் விரைவான நோய் தொற்றை கண்டு அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக 2002-இல் எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்றவற்றால் 60 லட்சம் மக்கள் மடிந்தனர். குறிப்பாக மலேரியாவால் மடிந்தவர்கள் 10 லட்சம் பேர். இதில் பெரும்பான்மையானவர் குழந்தைகள்.

2002 உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின் படி மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் நிமோனியா, சின்னம்மை மற்றும் வயிற்று போக்கால் உயிரிழந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இருந்தாலும், அது மக்களை சென்றடைய வில்லை என்பது கசப்பான உண்மை.

நமது நாடும் இதற்கு விதிவிலக்காக இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக இந்திய நாட்டில் இன்றளவும் 65% மக்கள், மருத்துவரால் இன்றளவும் பெரும்பான்மையான குழந்தைகள் ஊட்டசத்திண்மையால் பாதிப்படைந்துள்ளனர். இன்றளவும் கர்ப்பகால மரணம் மற்றும் குழந்தை இறந்தே பிறப்பது பிறந்து சிறிது நேரத்தில் இறப்பது போன்றவை கணிசமான அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தேசிய நோய் தடுப்பு திட்டம் போன்றவைக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டாலும், போலியோ, காசநோய், மலேரியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உயிரிழப்பு பெருமளவு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

லாபம் கொழிக்கும் மருந்துத்துறை, மற்றும் செயல்பாடு


ஆயுத விற்பனை கச்சா எண்ணை விற்பனை போன்றவற்றிற்கு நிகராக லாபம் கொழிக்கும் துறை மருந்துத்துறை. கிட்டத்தட்ட, 106 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாடு, மருந்துக் கம்பெனிகளின் வேட்டைக்காடு. குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் என்பது பன்மடங்கு பெருகிகொண்டிருக்கிறது. உலக அளவில் முதல் 10 இடங்களை தக்க வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் ஆண்டு சராசரி 180 பில்லியன் அமெரிக்க டாலர்கள். மொத்த உலக மருந்து சந்தைகள் ஆண்டு சராசரி 375 பில்லியன் டாலர்கள். மேலும் உலக அளவில் முதல் 15 இடங்களை தக்க வைத்திருக்கும் நிறுவனங்களில் ஆண்டு சராசரி என்பது பல மத்திய தர நாடுகளின் ஆண்டு வருமானத்தை விட அதிகம்.

இந்திய ஏகபோக நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக தன்னுடைய லாபத்தை பெருக்கி கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இருப்பினும் மருந்துத்துறைக்கான ஏற்றுமதியில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் என்பது கற்பனைக்கெட்டாதது. குறிப்பாக வளர்ந்த (G8) 8 நாடுகளின் ஏற்றுமதி என்பது மொத்த எற்றுமதியில் 79.7மூ தக்க வைத்துள்ளது.

பொதுவாக, மருந்து உற்பத்திக்கான (எந்த வடிவிலிருந்தாலும்) செலவு என்பது மருந்தின் மொத்த விலையில் 150% முதல் 1500% வரையில் குறைவு என்பதாகும். மேலும் பெருவாரியான பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி பிரிவை அனைத்து நாடுகளிலும் (தங்களுடைய விற்பனைக்கு உட்பட்ட) ஏற்படுத்திக் கொள்வதில்லை. மாறாக தங்களுடைய பெயர் அங்கீகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பல்வேறு நாடுகளில் (மூன்றாம் உலக) நிதியை மட்டும் மூலதனம் செய்து, அந்தந்த நாடுகளிலுள்ள சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்களின் மூலம் உற்பத்தியை மேற்கொள்கின்றனர். இத்தகைய சிறு தொழில் உற்பத்தியாளர்களிடம் சிறந்த உற்பத்தி நடைமுறை (Good Manufacturing Practice, GMP) சான்றிதழ் இல்லை என்பது வேதனைக்குரிய உண்மை. இத்தகைய நடவடிக்கை மூலம் மருந்தின் தரம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. மேலும் பன்னாட்டு நிறுனங்களின் உற்பத்தி தளமாக பெரும்பான்மையான இந்திய நிறுவனங்கள் மாற்றப்பட்டு, புதிய மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடாமல் உள்ளனர். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெறப்பட்ட தங்களது மருந்துகளின் அடிப்படை மருந்துகளாக மாற்றி, தங்கள் நாட்டிற்கு எடுத்துச்சென்று, அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

ஆகவே, இத்தகைய நடவடிக்கையின் மூலம், இந்திய நாடு தன்னுடைய தேவைக்காக இறக்குமதியை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை. மேலும் உற்பத்தி என்பது மக்களின் தேவையை சார்ந்து இல்லை. இறக்குமதி சார்பு நிலை என்பது பன்னாட்டு நிறுவனங்கள் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை தாங்களே தீர்மானித்துக் கொண்டு நமது நாட்டை கொள்ளையடிப்பது தொடர்வது ஒருபுறம், மற்றொருபுறம் பெரும்பகுதியான மக்கள் இதை வாங்கும் சக்தியின்றி நோயின் கோரப்பசிக்கு ஆளாகின்றனர். மேலும் பொதுத்துறையின் மூலம் எண்பதுகளில் நாம் பெற்ற சயசார்பு (மருந்துதுறை) என்பதை மெதுவாக இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. தங்களுடைய லாபத்தை மேலும் அதிகரிக்கும் விதமான இந்திய ஏகபோக நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி பிரிவை ஹிமாச்சல் பிரதேசத்திற்கு மாறிவருகின்றன. இதன் மூலம் கலால் வரியில் 10 வருடம் விலக்கு அளிக்கப்படுகிறது.

மக்களும் மருந்தும் பொதுவாகவே மருந்துகள் விலை என்பது எட்டாக்கனியாகி கொண்டிருக்கும் வேலையிலே, நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இன்றைக்கு மக்கள் பயன்படுத்தும் மருந்துகளில் 80% மருந்துகள் உதவி சிகிச்சை (Supporting Theraphy)க்கானவை பெரும்பாலானவை அத்தியாவசியமற்ற மருந்துகள் பட்டியலில் வரக்கூடியவை.

ஒட்டுமொத்த மருந்துத்துறையின் இதன் பங்கு மிகப்பெரியவை. இத்தகைய மருந்துகள் இல்லாமலேயே நோயை குணப்படுத்த முடியும். நமது அன்றாட உணவில், ஊட்டச்சத்து பொருள்களை சேர்ப்பதன் மூலம் இக்குறைகளை களைய முடியும். ஆனால் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனங்கள், இத்தகைய அத்தியாவசிய மருந்துகள் விற்பனையிலேயே அதிக கவனம் செலுத்தி கோடி, கோடியாக லாபத்தை ஈட்டுகிறது. அத்;யாவசிய, உயிர்காக்கும் மருந்துகள் விலையோ கட்டுக்கடங்காமல் சென்று மக்களின் உயிருடன் விளையாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய மருந்துகளை சிறு தொழில் உற்பத்தியினர் மூலம் உற்பத்தியை மேற்கொள்வதால் தரம் என்பது கேள்விக்குறியாகிறது. மேலும் பல தரம் குறைந்த, மற்றும் போலிமருந்துகள் (SPURLOUS DRUGS) மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது. மேலும் பல மருந்துகள், மருத்துவரின் ஆலோசனை இன்றி, மக்கள் நேரடியாக மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்;கின்றனர்.

மேலும் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் நமது நாட்டில் தாராளமாக புழங்கிக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, நிமுசுலைடு, பிராமித்தையாசின், காக்சிப், கேட்டிபிளாக்ஸஸின் போன்றவை. மேலும் பல நாடுகள் விட்டமின் மாத்திரைகளை தனித்தனியாக, தேவையின் அடிப்படையில் விற்பனை செய்கிறது. குறிப்பாக விட்டமின் B12 குறைவு நோய் ஏற்பட்டால் நோயாளிக்கு அதைமட்டும் வழங்கப்படுகிறது. ஆனால் அதே நாடுகளை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் நமது இந்திய நாட்டில் விட்டமின் மருந்துகளை கலவையாக வழங்குகின்றனர்.

பெரும்பாலான மக்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளை பற்றி போதிய ஞானம் இல்லாமல் உள்ளனர். தற்பொழுது நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியில். அளவுக்கதிகமாக விட்டமின் மாத்திரைகளை உட்கொள்வது பக்க விலைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, ஆயுட்காலத்தையும் குறைக்கும். மேலும் நமது நாட்டில் போலி மருத்துவர்கள்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட நிறுவனங்கள், மருந்தை பரிந்துரை செய்கின்றனர். இவர்களால் பலமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளச்சந்தை, போலிமருந்து, முறையற்ற மருந்து விற்பனை

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி இந்திய மருந்துச் சந்தையில் 40% உயிருக்கு ஊறு விளைவிக்கக்கூடிய போலி மருந்துகள். பல சிறுதொழில் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்திக்கான அனுமதி பெறாமலே, மருந்துகளை உற்பத்தி செய்து, விற்பனைக்கு விடுகிறது. மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களின், சிறுதொழில் உற்பத்தி பிரிவு, அந்த நிர்வாகங்களுக்கு தெரியாமல் அளவுக்கதிகமாக அதே மருந்துகளை உற்பத்தி செய்து, விற்பனைக்கு விடுகிறது.

மேலும் கள்ளச்சந்தை (மருந்து துறையில்) என்பது வித்தியாசமான முறையில் நடைபெறுகிறது. மருந்துத் துறையில் கள்ளச்சந்தை என்பது கூடுதல் உற்பத்தியை கணக்கில் காட்டாமல், அதற்கான உற்பத்திவரி, சேவை வரி போன்றவற்றை செலுத்தாமல் நேரடியாக சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறது. மருந்துக் கம்பெனி நிர்வாகங்களே நேரடியாக இச்செயலில் ஈடுபடுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, மருந்துக்கட்டுபாட்டு துறை அதிகாரிகளுக்கு மருந்து நிறுவனங்கள் மூலம் பல வசதிகள் செய்துத் தரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இன்றைய மருந்து விற்பனை என்பது முழு அளவில் முறையற்ற நிலையில் உள்ளது. லாபத்தை அதிகரிக்கும் நோக்குடன், மருத்துவர்களிடம் மருந்தை பற்றிய முழுத்தகவல்களை தெரிவிப்பதில்லை.

மேலும் தங்களுடைய மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்களுக்கு, கார், இலவச வெளிநாட்டு பயணம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை வழங்கி தங்கள் வயப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் துரதிஷ்டவசமாக ஒரு சில மருத்துவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். இவர்கள் மக்களுக்கு தேவையற்ற மருந்துகளை கூட பரிந்துரைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேலும் மருந்து தேக்கி வைத்தல், அனுப்புதல், மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் போன்றவற்றிற்கு கூடுதலாக தள்ளுபடி விற்பனை செய்கின்றனர். இந்த தள்ளுபடியால் மக்களுக்கு எந்த வித பயனுமில்லை.

துறை சார்ந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக மருந்துத்துறை நிர்வாகங்களின் கூட்டமைப்புகளான OPPI, IDMA போன்றவை இத்தகைய முறையற்ற விற்பனை முறையை கையாள மாட்டோம் எனக்கூறினாலும், இத்தைகைய நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. மேலும் மருத்துவ கவுன்சிலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு துணை போவதில்லை என அறிவித்திருக்கிறது. மேலும் இத்துறை சார்ந்த தொழிலாளர்களால் நிறுவனங்களின் கள்ளச்சந்தை விற்பனை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சன்பார்மா போன்ற நிறுவனம் காலாவதியான மருந்துகளின் அச்சடிக்கப்பட்ட மேலுறையை மட்டும் மாற்றி விட்டு மறு விற்பனைக்கு ஏற்பாடு செய்தது.

மேலும் சன்பார்மா போன்ற நிறுவனங்கள் பெட்ரோசோல் என்ற கேன்சர்கான மருந்தை மகப்பேறிண்மைக்கான மருந்தாக பயன்;படுத்துகிறது. மேலும் ஒக்கார்ட் என்ற நிறுவனம் நீரிழிவு நோயிற்கான இன்சூலின் என்ற மருந்து, அதன் பெயர் ஓசூலின். இந்த ஓசுலின் ஊசியில் மருந்திற்து பதிலாக, வெறும் தண்ணியை நிரப்பி விற்பனை செய்தது கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோடின் தயாரிப்பு இருமல் மருந்துகள், தவறான முறையில் போதை பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஃபைசர் கம்பெனியினுடைய COREX, மற்றும் நிக்கோலஸ் பிரமல் கம்பெனியினுடைய Phensyolylபோன்றவை இத்தகைய மருந்துகள் தான். பென்சிறல் என்ற மருந்து, நிர்வாகமே பங்களாதேஷிக்கு கடத்த முயற்ச்சிக்கும் போது, எல்லை பாதுகாப்பு படைவீரர்களால் பிடிக்கப்பட்டது.

மருந்து விலை

மருந்துகளின் விலை குறித்து பிரணாப்சென் (2005) கமிட்டியின் பரிந்துகைள் பல நல்லவைகளாகவுதம் ஏற்புடையதாகவும் இருந்தது. ஆனால் மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதற்கு மேற்கொண்ட முறை மருந்து கம்பெனிகளிடம் சோரம் போனதை வெளிப்படுத்துகிறது.

மருந்து விலையை நிர்ணயிக்கும் போது, ஒரே மருந்தை பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யும் மூன்று கம்பெனிகளின் விலையை சராசரி எடுத்து கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையால் மக்களுக்கு பெரிய அளவில் பலனை தராது. பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளாக மாற்றப்படுவதால், மக்கள் தேவைக்கான மருந்தின் விலையை கட்டுப்படுத்தும் சூழ்நிலை இந்தியாவில் இல்லை. மேலும் மருந்து கம்பெனிகளே, மருந்தின் விலையை கட்டுபடுத்துவது என்பது ஏற்புடையதல்ல.

தற்போது 11 மருந்துக் கம்பெனிகள் மூலம் 886 மருந்துகளின் விலையை குறைப்பதறகான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு கூறியது. இந்த 886 மருந்துகள் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் விற்;கக்கூடிய மருந்துகள் அல்ல. மேலும் மருந்துக் கம்பெனிகளும் இந்த மருந்துகளை விற்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஆகவே இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை உணரவேண்டும்.

முந்தைய பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் (DPCO) கீழ் இருந்து அனைத்து மருந்துகளையும் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியது பெருமளவில் மருந்து விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது. தற்போதைய மத்திய அரசு மீண்டும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் 74 மருந்துகளை கொண்டுவந்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மேலும் 400 மருந்துகளின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பரிந்துரைத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உயிர்காக்கும் அத்யாவசிய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் கொண்டுவர பரிந்துரைத்தது.
இச்சூழலில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் 2005 சனவரியில் அதிகபட்ச விலையின் பேரில் கலால் வரி அமுலாக்கத்தை அறிவித்தார். உற்பத்தி அடிப்படையில் கலால் வரி நிர்ணயம் என்பது விலையை குறைக்க உதவும் அவ்வாறு மாற்றுவதற்கு மாறாக கலால் வரியை 16%மாக உயர்த்தியது மேலும் மக்கள் மீதான வரிச்சுமையை அதிகரிக்கும்.

மக்களின் தேவையும் அரசின் உடனடி கட்டமையும்

1. தேசிய நோய் தடுப்புத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாயை முறையாக மக்களை சென்றடையும் வகையில் முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

2. ரூபாய் 10000 கோடி முதலீட்டில் வகுக்கப்பட்ட ‘தேசிய கிராம சுகாதார செயல்முறை திட்டம்’ முழுமையாக அதன் இலக்கை எட்டும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

3. ஆரம்ப சுகாதார மையங்கள் தனியார் மயமாக்கப்படுவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும்.

4. மருந்துகளின் விலை குறைக்கப்பட வேண்டும்.

5. அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் ‘கட்டாய விலை கட்டுப்பாட்டின் கீழ் முறைப்படுத்தப்பட வேண்டும்.

6. மருந்து நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படும் மருந்துகளின் விலையில் ஏற்படும் முறைகேடுகளை களைவதற்கும், விற்பனை வரி, மற்றும் கலால் வரி நிர்ணயம் செய்வதில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்கும் விசாரனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

7. மாற்று மருந்துகள் உள்நாட்டிலேயே கிடைக்கும் பொழுது அத்தகைய மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்து தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

8. பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

9. மருந்து நிறுவனங்கள், அடிப்படை நிலையிலிருந்து பெரும்பான்மையான உற்பத்தியினை உள்நாட்டிலேயே மேற்கொள்ள வலியுறுத்தப்பட வேண்டும்.

10. மருந்து நிறுவனங்கள், இல்லாத மருத்துவமனைகளின் பெயரில் பில் செய்து, கள்ளச் சந்தையில் மருந்துகளை விற்பனை செய்வதைத் தடுக்க CBI விசாரனை அமைக்கப்பட வேண்டும்.

11. மருந்து நிறுவனங்களால் செய்யப்படும்; முறையற்ற மருந்து விற்பனையைத் தடுக்க இரசாயனத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக்குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

12. போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க விசாரணை அமைக்கப்பட வேண்டும்.

Friday, July 18, 2008

புதுவை மாநில சுகாதாரக் தேவைகள்

“அனைவருக்கும் சுகாதாரம்” என்ற இலட்சியத்தை அடைவதற்காக புதுவை மக்களாகிய நாங்கள் அனைவரும் உறுதி கொண்டுள்ளோம். இன்றைய பொருளாதார சூழலில் மக்களின் சுகாதாரம் அடிப்படை உரிமை என்பதற்கு பதிலாக பணமுதலீட்டிற்கும் இலாபத்திற்கும் சாதகமாக உள்ள ஒரு தொழிலாக மாறிவருவதை நாங்கள் கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது. எந்த ஒரு நவீன, நாகரீகமான அரசும் அனைவருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு அடிப்படையான தரமான ஆரோக்கியத்தை உறுதிபடுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். 1978 “அல்மா ஆட்டா” வை கைவிடக்கூடாது. ஆரோக்கியம் என்பது சுகாதார வசதிகளை வழங்குவதோடு நின்றுவிடக்கூடாது. அடிப்படையான மக்கள் உரிமையாக மாற்றி அமைக்க தேவைப்படுவன:
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கதை தகுந்த அதிகாரமும். பொருளாதார வசதிகளுடன் கூடிய, உண்மையான பரவாலாக்கப்பட்ட உள்ளுர் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல். விவசாய உற்பத்தியும், பசி மற்றும் வறுமையை போக்க உறுதியுடன் கூடிய அரசமைப்பும் தேவை. அனைவருக்கும் கல்வி, தேவையான தரமான குடிநீர், வீடு மற்றும் சுகாதார வசதிகளை உறுதிபடுத்துதல் நிலையான தரமான மக்கள் வாழ்க்கை. தூய, நிலையான சுற்றுச்சூழல். அவசியமான மருந்துகளை எளிய விலையில் அளிக்கக்கூடிய மருந்து உற்பத்தி தொழில்முறை. மக்கள் தேவைகளை உணர்ந்து மக்களால் பங்கேற்;கக்கூடிய ஆரோக்கிய வாழ்வுத்திட்டம்.


புதுவை மாநில மக்கள் ஆரோக்கியம் சூழலை பொருத்த வரையில்
1.தற்போதுள்ள ஆரம்ப சுகாதார சூழலை வலுப்படுத்தும் வகையில் நகரப்பகுதிகளில், குறிப்பாக குடிசைவாழ் மக்களுக்கு அதிகமான ஆரம்பசுகாதார நிலையங்களை துவங்குதல்.
தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலைய இணைப்புகளில் பரிந்துரைகளும் மற்றும் தொடர் கண்காணிப்பிற்கான வசதிகளை ஏற்படுத்துதல்
ஆரம்ப சுகாதார நிலைய அளவிலேயே பரவும் மற்றும் பல பரவிய நோய்களை குணப்படுத்தக்கூடிய வகையில் அவற்றின் தரத்தை மேம்படுத்துதல். சர்க்கரை வியாதி, காசநோய், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களை பெரிய மருத்துவ நிலையத்திற்கு செல்லாமல் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்துவதற்தான வசதிகளை ஏற்படுத்துல்.
ஆரோக்கியம் பேணுவதற்கு உள்ளுரிலேயே திட்டம் தீட்ட வழிவகுத்தல்பல குடும்பங்களுக்கு அநாவசியமான செலவையும் மருந்துகளையும் தவிர்க்கும் வகையில் நோய்தடுப்பு பணிக்காக சமூக ஆரோக்கி;யப் பணியாளர்களை உள்ளுரிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தக்க பயிற்சியளித்தல்.


2.அரசு பொருளாதார நிதியுதவியுடன் கூடிய, உள்ளுர் அமைப்புகள் முழுமையாக பங்கேற்க கூடிய வகையில் (பஞ்சாயத்துக்கள், கூட்டுறவு அமைப்புகள், நீர்பகிர்வு அமைப்புகள் சுகாதாரக்குழுக்கள்) ஒரு முறையான மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திட்டத்தை அரசு அமுல்படுத்துவதன் மூலம் அநாவசிய செலவையும் முழுமையான அமுல்படுத்தும் முறையையும் உறுதி செய்தல்.


3.குறிப்பிட்ட மருத்துவ துறைகளில் நிபுணர்களை தயார் செய்யும் வகையில் நிலவும் இன்றைய சுகாதாரத் துறையில். அடிப்படை மருந்துகளையும் போதுமான இணை சுகாதார நபர்களைத் தயார் செய்யக்கூடிய, மனிதவள மேம்பாட்டுத்திட்டத்தை மருத்துவத்துறையில் உள்ள மருத்துவக்கல்வி, செவிலியர் பயிற்சி, இணை சுகாதார நபர்கள் ஆகியவற்றிற்கான பயிற்சி கொண்டுவருதல். மருத்துவக் கல்லூரிகளை மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய துவங்க வேண்டுமே ஒழிய தனி நபருக்கு வேலை வசதிகளை ஏற்படுத்திதர அல்ல.


4.வியாபாரமான தனியார் மருத்துவத்துறையை கட்டுப்படுத்த வேண்டும். பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உரித்தான அனைத்து கோட்பாடுகளையும் உறுதியாக கண்காணித்தல்;;: அனைத்து நிலையிலும் ஒரே கட்டணம் மற்றும் மருந்துப் பரிந்துறைகளை தொடர்ந்து கண்காணிக்கத் தனியார் துறையில் தேவை உள்ளது. தற்போது நிலவும் கமிஷன் தரும் முறையை நிறுத்த வேண்டும். மருத்துவ நிபுணர்கள் மற்றும் தகுதியுள்ள, உறுதியான நபர்களை கொண்ட தனித்த குழுக்களை கொண்டு கண்காணிப்பு நடவடிக்கையை மேம்படுத்துதல்.


5. அறிவியல் பூர்வமான மருந்துக் கொள்கையை உருவாக்க
அவசியமான மருந்துப் பட்டியலை அமைத்து அரசு சுகாதார நிறுவனங்களிலும் பயன்படுத்த வேண்டும்.
ஓவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் விற்கப்படும் மருந்துகளின் பட்டியலை தயாரித்து அவைகளின் முக்கயக் கூறுகளை தொகுத்து வெளியிட வேண்டும்.
மருந்து வகைகளின் மூலப்பெயர்களை தமிழில் அச்சிட்டு வெளியிட வேண்டும்.
பொதுநிலையிலிருந்து மருந்துகளைப் பற்றிய விளம்பரங்கள் மற்றும் வியாபாரம் செய்வதை கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர வேண்டும்.
பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நவீன மருந்துகளுடன் சேர்த்து உபயோகிக்கும் வகையில் ஒரு ஒட்டு மொத்தமான சுகாதார கொள்கையை உருவாக்கி ஊக்குவிக்க வேண்டும்


6. பரவக்கூடிய நோய்களைத் தடுக்க தகுந்த சூழல் மற்றும் சமூக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நகர்ப்புற வளர்ப்புத்திட்டங்களை கண்காணித்து, கட்டிட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி கிருமிகள் வளர்வதற்கான சூழலை தடுக்க வேண்டும்.
உள்ளுர் சமூக மக்களையும் இயக்கங்களையும் சேர்த்து நல்ல குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை பாதுகாத்தல்.

நூறு சதவிகித கழிப்பறை திட்டத்தை உருவாக்கி 5 ஆண்டிற்குள் அதை அடைய முயலுதல்.
மலேரியா, காசநோய், போன்ற நோய்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும், அனைத்து மருத்துவர்களும் தெரிவிக்கும் முறையை கட்டாயப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
பாலியல் நோய்கள் (AIDS) போன்றவற்றை பரவாமல் தடுக்க கல்வி, பாலியலை வியாபாரமாக்குவதை தடுத்தல், மக்களிடம் உள்ள தவறானக் கணிப்புகளை களைக்க இயக்கங்கள் நோய்த்தடுப்பு மற்றும் சீர்முறைகளை பெண்களுக்கு தகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த வேண்டும்.


7.பெண்கள் சுகாதார நலனிற்காக
சமூக மாற்றத்தில் பெண்கள், பெண் சுகாதாரம் குறித்த அறிவைப் பரப்புதல், சத்தாண உணவு மற்றும் சுகாதாரத்தில் பெண்களுக்கு எதிராக நிலவி வரும் சூழலை மாற்றுதல். பெண்கள் வேலை மற்றும் வீட்டுசூழலில் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதினால் விளையும் ஆரோக்கிய சீர்கேட்டை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல். அனைத்து துறைகளிலும் தாய், சேய் நல வசதிகளை முழுமையாக செயல்படுத்த உறுதியான கொள்கை மற்றும் நடைமுறை சார்ந்த நடவடிக்கைகள்.
தனியாக வாழும், கைவிடப்பட்டு வாழும் விதவைப் பெண்கள் மற்றும் விபசாரத்தில் சிக்கியுள்ள பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாலியல் நோய்கள், தாய் நலம், கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை குறித்த சுகாதார வசதிகளை பெண்களுக்கு சாதகமான முறையில் மாற்றி அமைக்க வேண்டும்.


8.குழந்தைகளின் சகாதார நலன் குறித்து
தகுந்த முறையான குழந்தை உரிமைக் கோட்பாடு, குழந்தை நலன் பேணுவதற்கான போதுமான நிதி ஒதுக்கு, ICDS திட்டத்தை விரிவாக்கி ஊக்குவித்தல், வேலை செய்யும் பெண்களுக்கு உதவும் முறையான குழந்தைக் காப்பீட்டு நிலையங்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொது இயக்கங்கள்.
குழந்தைகளின் மீது வன்முறை, குறிப்பாக பாலியல் வன்முறையைத் தடுக்க மக்களை உள்ளடக்கிய நடவடிக்கைகள் மற்றும் தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்கு தகுந்த பாதுகாப்பு.
குழந்தை தொழிலாளர்களை அறவே நீக்க கல்வி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அடுத்த 5 ஆண்டிற்குள் செய்து முடித்தல்.
அடுத்த 5 ஆண்டிற்குள் 5 வயதிற்கு குறைவான குழந்தைகள் சாகும் சதவிகிதத்தை ஐந்திற்குள் குறைக்க தேவையான சமூக சுகாதார நலப் பணியாளர் திட்டம், ஐஊனுளு திட்டம் மற்றும் பொது வினியோக முறையை பலப்படுத்தி அரசியல் விருப்பத்துடன் உறுதியுடன் செயல்பட வேண்டும்.


9.பணியிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் விளையும் நோய்களுக்கான தொழில்நுட்ப காரணிகளையும், தொழிற்சாலைகளையும், விவசாய நடவடிக்கைகளையும் கண்காணித்தல் அவசியம்.


10.மனநோய்ப்பேணுதலை உடல்-மருத்துவம் சார்ந்த முறைக்கு அப்பால் ஒட்டுமொத்தமான முறையான மருத்துவ முறையை உருவாக்குதல் மனநோய்களை முன்னரே அறிந்து கட்டுபடுத்தும் நுட்ப சுகாதார நிலையங்களை ஆயத்தம் செய்து சமூகத்தில் விழிப்புணர்வு கொண்டு வரத் தகுந்த நடவடிக்கைகள்.


11.வயதானவர்களின் சுகாதாரம் பேண பொருளாதாரப் பாதுகாப்பு தகுந்த வேலை வாய்ப்புகள் மற்றும் அவசியமான தங்குமிடங்களை உருவாக்குதல்.


12. மனரீதியாக மற்றும் உடல்ரீதியாக ஊனமுற்றவர்களின் ஆக்கபூர்வமானத் தன்மைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை சமூகத்தில் சாதாரணமான மனிதர்களாக வாழ வகை செய்ய கல்வி, வேலை மற்றும் சுகாதாரம் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் தனிச் சிறப்பான முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு நல்வாழ்வு அளித்தல்.

புதுவை ஆரோக்கியம்


ஆரோக்கியம் என்பது நோய் அல்லது ஊனம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. உடல், மனம் மற்றும் சமுதாய அளவில் நலமான வாழ்வைக் குறிக்கிறது. அப்படியென்றால் ஆரோக்கியத்தின் கூறுகள் சரிவிகித உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுச்சூழலின் தூய்மை, போதிய வேலை, ஓய்வு, அடிப்படை சுகாதார வசதிகள் இவை அனைத்தும் கொடுப்பது அனைவருக்கும் கிடைக்கிறதா என்று கண்காணிப்பது அரசின் கடமையாகும். இது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையும் ஆகும். சுதந்திரம் பெற்று 53 ஆண்டுகள் ஆன பின்பும் அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வு என்பது வார்த்தை அளவிலும், எழுத்தளவிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புதுவையில் கடந்த பத்தாண்டுகளில் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் கவனிக்கும்போது. 1991-92 ல் 8 லட்சமாக இருந்த மக்கள் தொகை இன்று நகர்;புறத்தில் 7 லட்சமும் 291 கிராமத்தில் 4லட்சமாகவும் மொத்தம் 11 லட்சமாக உயாந்துள்ளன.


புதுவையில் அரசு மருத்துமனைகள்4ம் சமுதாய நலவழி மையங்கள்4ம் E.S.I 12ம் ஆரம்ப சுகாதார நிலையம் 39ம் துனைசுகாதாரநிலையம் 75ம் உள்ளன.
புதுவையில் ஓர் ஆண்டில் 55 லட்சம் வெளிபுற நோயாளிகளுக்கும் 1.24 லட்சம் உட்புற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.குறைந்தது1.18 கிலோமீட்டருக்கு அதிகம் 3 கிலோமீட்டருக்கு ஒரு மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. தாக அரசு அறிவித்துள்ளதும்


தேர்ந்தேடுத்த சில நோய்களின் மீது அதிக கவணம் செலுத்துவதும் கிராமங்களி;ல் இருக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளுர் மக்களின் ஆரோக்கிய தேiவைகளை புரிந்துகொள்ளாமல் செயல்படுகின்ற தொடர்கிறது.
மையங்களின் ஊழியர்கள் மேலிடத்தின் கட்டுபாடு,மற்றும் கால அட்டவணைப்படி பணிபுரிந்து அரசு பணியாளர்களாகவே செயல்பட்டு வருகின்றனர்.


மற்றமாநிலங்களை ஒப்பீடும்போது சில கூடுதல் வசதிகளும் கூடுதல் நிதி ஒதிக்கீடு இருந்தாலும். அதற்கேற்ற வகையில் மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்படவில்லை. ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மருந்துகள் வழங்கப்படாமல் இருப்பதும் Anti பிஒடிக் மருந்துகள் நோய் எதிர்ப்பு தன்மையை இழந்த பின்பும் அதே மருந்துகள் இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தேவையான நவீன அறிவியல் மருந்துகள் கொடுக்கப்படாமல் மிக மலிவான மருந்துகளையே கொடுத்து வருகின்றனர்.

90க்கு முன்னால் புதிய மருத்துவமனைகளும் அவைகளுக்கு தேவையான அடிப்படை கட்டுமான வசதிகள் விரைவாக செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்பொழுது கிராமப்புற சுகாதாரத்தை முழுமையாக நிராகரிக்கும் வகையில் படுக்கை வசதி உட்பட அனைத்து வசதிகளும் கிராமப்புற மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை.பராமரிப்பு பணிகளுக்காக கூடுதல் நிதியோ பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது விலைஉயர்ந்த சாதனங்கள் விரைவில் பழுதடைந்து வீணாகும் நிலையே தொடர்ந்து நீடிக்கிறது. தனியார் மருத்துவமனைகள் உலகத்திலே வேறு எங்கும் இல்லாத வகையில் இச்சிறிய பிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகளும் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதனால் புதுவையைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

1990 களில் இருந்த மருத்துவர்களே மக்கள் தொகை வளர்ந்த பின்னும் அதிகப்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன? தற்பொழுது இருக்கின்ற 489 மருத்துவர்களில் 106, குருப்-Cல் 200, ஊழியர்களும் குருப்-Dல் 250 ஊழியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதும்.

தற்போது பணி அமர்த்படும் மருத்துவர்கள் எல்லாம் காண்ராக்ட் முறையில் பணியஅமர்த்தப்படுவது தனியார்மையமாக்களுக்கு முதல்படி. கிராமப்புறங்களில் பணியாற்றுகிற மருத்துவர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தாமல் இருப்பதும், சிறப்பு மருத்துவர்களின் திறமையை மழுங்கடிக்கும் விதமாக அவர்களுக்கு போதிய பணிகள் வழங்கப்படாமல் இருப்பதும், பணிமாற்றங்களில் உயர் அதிகாரிகளின் அரசியல் காரணங்களால் அதிக மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஊதியம் அரசு மருத்துவமனையை ஒப்பிடும் போது 50 மடங்கு அதிகமாக இருப்பதும் முக்கிய காரணமாகும்.
2000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இல்லாமல் தற்பொழுது 5000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை தொடர்கிறது. பெரும்பாலும் புதுவை மருத்துவமனைகளில் தமிழகத்தை சேர்ந்த மக்களும் பெருமளவில் வரும்போது அவர்களுக்கும் சேர்த்து மருந்து, மாத்திரைகள் அதிகரிக்கப்படாத நிலை தொடர்கிறது.

மிகச்சிறிய பகுதியான புதுவையில் 9 மருத்துவ கல்லூரிகள் உள்ள அரசு கல்லூரிகள் 3ம் தணியார் மருத்துவ கல்லூரிகள் 7ம் உள்ளன.

கேரளாவில் மொத்தம் மருத்துவ கல்லூரிகள் 6 இதில் 5 அரசு மருத்துக்கல்லூரியும்.கூட்டுறவு முறையில் 1ம் உள்ளன.
தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை அனுமதிப்பது என்பது காசு உள்ளவர்களுக்குத் தான் மருத்துவம் என்ற உலகமயமாக்கல் கொள்கையை புதுவை அரசும் அமுல்படுத்தி வருகிறது. மேலும் இம்மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை. உலகம் முழுவதும் புதிய, புதிய நோய் ஏற்பட்டுவரும் சூழ்நிலையில் நோய்களை நிரந்தரமாக வராமல் தடுப்பதற்கான பணியினை செய்யாமல் அதற்கு கூடுதல் நிதி ஒதுக்காமல் தற்காலிகமான பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதில் அரசியல் பின்னணி என்ன?


சிக்குன் குனியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை போக்க அரசு எடுக்கும் நடவடிக்கை மேலோட்டமானதாகும். கொசுக்களை ஓழிப்பதற்கான கூடுதல் மருந்துகளோ, பணியாளர்களோ நியமிக்கப்படாமல் சிக்குன் குனியா நோயால் யாரும் இறக்கவில்லை என்ற பதிலை கூறுவதற்காக மட்டுமே அரசு இருப்பதாக கருதிக் கொள்ளலாம்.


புதுவையில் மருத்துவ சேவைகளுக்காக ஒரு தனிநபருக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியானது 2004 புள்ளிவிபரப்படி 802 ரூபாய். மருத்துவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக அரசு கூறினாலும் அதன் மூலம் மக்களுக்கு முழுமையான ஆரோக்கிய வாழ்வு அளிக்கப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.
அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வு என்பது அரசின் அலட்சியத்தாலும் தனியார் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்காகவும் ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழித்து வருகிறது.


இன்று இந்தியா முழுவதும் மருத்துவ செலவுக்காக மட்டுமே தங்களுடைய நிலத்தில் ஒரு பகுதியை விற்றும் தங்களுடைய சேமிப்பில் பெரும் பகுதியை இழந்தும் அதிக கடன் வாங்கி அல்லல் படுவதும் நீடிக்கச்செய்வதற்கான நடவடிக்கைகளையே மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதில் புதுவை அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள் என்ன என்பதை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மக்களுக்கு சுகாதார மருத்துவ வசதிகள் அளிப்பதிலிருந்து விலகி அரசுகள் செயல்பட ஆரம்பித்து வருவதை மக்களிடையே கொண்டுசெல்லவேண்டிய கட்டாயம் நம்முன்னே உள்ளதை நாம் கவணத்தில் கொள்ளவேண்டும்.