Thursday, August 21, 2008

விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் பன்னாட்டுக் கம்பெனிகள்தான்

விவசாயத் துறையில் பன்னாட்டு பெரு முதலாளித்துவ கம்பெனிகள் நடத்தும் தலையீடுகள்தான் நாட்டில் விவசா யிகள் தற்கொலை அதிகரிக்க காரண மாகும் என்று பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவா கூறினார்.


‘இந்தோ-யுஎஸ் நாலேஜ் இனி சியேட்டிவ் ஆன்புட் செக்யூரிட்டி’ என்ற தலைப்பில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசினார்.

விவசாயத் துறையில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு விவசாயிகளுக்கு பயனளிக்காது. பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும் ரசாயன உரம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும்தான் பயனளிக்கும். ரசாயன உரத் தயாரிப்புக் கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மானியமாக வழங்கும் அரசு ஏழை விவசாயிகளைப் புறக்கணிக்கிறது. இந்திய- அமெரிக்க ஒத்துழைப்பின் மூலம் அமெரிக்கா விரும்புவது எரிசக்தி பாதுகாப்பு அல்ல; அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பே ஆகும். அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்குப் பின்னாலும் கூட விவசாயத் துறையில் அதன் முதலீட்டு நோக்கம் மறைந்திருக்கிறது. இந்திய விவசாயத்துறையை முற்றிலுமாக பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தாரைவார்க்கும் கொள்கையைத்தான் மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி எழவேண்டும் என்றும் வந்தனா சிவா கூறினார்.

பணவீக்க கணக்கீடு மோசடி

பணவீக்கம் என்பது பொதுவாக பொருட்களின் தேவை அதிகரிப்பதாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.

நமது நாட்டில் பண வீக்கத்தைக் கணிக்கும் முறையிலும் மோசடிதான் உள்ளது. பொதுவாக மொத்த விலைக் குறியீட்டெண்ணைத்தான் பணவீக்கத்திற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்கிறார்களே தவிர சில்லரை விலையை அல்ல. மொத்த விலைக்கும் சில்லரை விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

நாட்டு மக்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோருக்கு வருவாயில் 70 சதவிகிதம் உணவுக்கே செலவாகிறது. ஆனால் பணவீக்கத்திற்கான கணக்கில் உணவுப் பொருளை 22 சதவிகிதம் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். எஞ்சிய 78 சதவீதம் ஆடம்பரப்பொருள் முதல் கட்டுமானப் பொருள் வரை அடக்கம்.

உண்மையான கணக்குப் பார்த்தால் இவர்கள் சொல்லும் 11.05 என்ற சதவிகித கணக்கு மோசடியானது. பணவீக்கம் குறைந்தது 3மடங்காவது அதிகம் இருக்கும்.

உதாரணத்திற்கு சொல்வதென்றால் மிகமிகக் குறைந்த விலையில் கிடைத்த பிஸ்கட் பாக்கெட் 3 ரூபாயாக இருந்தது நான்கு ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 33 சதவிகித உயர்வல்லவா! இத்தகைய உயர்வுகளை மறைத்துக் கொடுக்கப்படும் கணக்குதான் இன்றைய பணவீக்க கணக்கு.

நசுக்கப்பட்ட இனத்தின் இரத்தசோகை

உலகிலுள்ள மக்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டியது அவசியம். ஆனால் நமக்கு சமயத்தில் காய்ச்சல், சளி, உடல் சோர்வு, பலவித நோய்கள் வந்துவிடுகின்றன. அச்சமயத்தில் நாம் மருத்துவரை நாடுகிறோம். அவர் நம்மை முதலில் நாக்கை நீட்டச் சொல்கிறார். விரல் நகங்களைக் காட்டச் சொல்லி, கண் இமைக்குள் எட்டிப்பார்த்து நம்மை பரிசோதிக்கிறார். இது எதற்காக? உடலின் இப்பகுதிகள், பார்வைக்கு நல்ல இளம் சிவப்புடன் இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாய், உடல் நலத்துடன் இருக்கிறீர்கள் என்று பொருள். இவை இலேசாக வெளுப்பாகத் தெரிந்தால், உங்களின் உடலில் போதுமான இரத்தம் இல்லை என மருத்துவர் கூறுவார்.

இரத்தசோகை.. என்றால்..!

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவே இரத்த சோகை எனப்படுகிறது. சிவப்பணுக்கள் அளவுக்கு அதிகமாய் அழிவதாலும் (சிவப்பணுவின் வாழ் நாள் 120 நாட்கள்), அதிகமான இரத்தப் போக்கினாலும், போதுமான அளவு இரத்த செல்கள் உற்பத்தியாகாததாலும் இரத்த சோகை உண்டாகிறது. அதுமட்டுமின்றி சத்துக் குறைவான உணவாலும், சிலவகைப் புற்றுநோய்களாலும், சில பாரம்பரியப் பிரச்சனைகளாலும், சில மருந்துகளாலும் கூட இரத்த சோகை உருவாகலாம். இரத்த சோகை பொது வாக எல்லாக் குழந்தைகட்கும் வரும் நோய்தான் இதன் முக்கியக் காரணி உணவில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான்!

இரத்தசோகை... வரலாறு...!

உலகில் 400 வகையான இரத்த சோகை உண்டு. உல கின் போலீஸ்காரன்,. பணக்கார நாடு எனக்கருதப்படும் அமெரிக்காவிலும் கூட இரத்த சோகை காணப்படுகிறது. அங்கே கருவுற்ற பெண்களில் 20 சதம் பேருக்கும், ஆண் களில் 2 சதம் பேருக்கும் இரத்த சோகை உண்டு. முதன் முதலில் இரத்த சோகை பற்றி அறியப்பட்டது கி.மு. 1500 ஆண்டுகட்குமுன் ஐரோப்பாவில்தான். இதனைப்பற்றிய தகவல் பாப்பிரஸ் மரப்பட்டைகளில் காணப்படுகிறது. அனீ மியா என்ற கிரேக்க சொல்லுக்கு, இரத்தம் இல் லாத என்று பொருள்

இரத்த சோகையில் சோகமான இந்தியா...!

இந்தியாவில் பொதுவாக பெண்களிடமும், குழந்தை களிடமும் அதிகமான இரத்த சோகை உள்ளது. இந்தியா வில் 59 சதம் பேருக்கு இரத்த சோகை இருப்பதாக கணக் கெடுப்பு கூறுகிறது. சமூக பொருளாதாரச்சூழல், தாயின் கல்வித்தரம், பிறந்த குழந்தையின் எடை, குழந்தையுடன் உள்ள சகோதரர்களின் எண்ணிக்கை, சத்துக்குறைவான உணவு போன்றவையே இரத்த சோகைக்கான காரணி களாகின்றன. உலகம் முழுவதிலும் சுமார் 2,000,000 மக்கள், குறிப்பாக பெண்கள் இரும்புச்சத்து குறைவாக வாழ்கின்றனர். வளர்முக நாடுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கிறது. காரணம் என்னவெனில், அங்கு நிலவும் வறுமை, உணவு போதாமை, சில நோய்கள், கருவுற்ற மற்றும் பாலூட்டும் காலத்தில் உடல்நலக் கவனிப்பு போதாமையால் பருவ வயதினரில் பெரும்பாலோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் 27 சதமும், வளர்ந்த நாடுகளில் 6 சதமும் பருவ வயதினருக்கு இரத்த சோகை இருக்கிறது.

உலகில் முதன்முதலில் கருவுறும் பெண்களில் 25 சதம் பேருக்கு இரத்த சோகை உள்ளது. வளர்முக நாடு களில் இனப்பெருக்க/குழந்தைபெறும் வயதில் உள்ள பெண்களில் 47 சதவீதத்தினருக்கும், கருவுற்றவர்களில் 59 சதம் பெண்களுக்கும் இரத்த சோகை காணப்படுகிறது.

இந்தியாவில் 1997களில் நடத்திய கணக்கெடுப்புப்படி 12-18 வயதுள்ள கிராமப்புற பெண்களுக்கு பரவலாக இரத்தசோகை காணப்படுகிறது. இவர்களில் பள்ளிக்கு செல்லும் பெண்களில் 82.9 சதம் பேருக்கும், பள்ளி செல்லாதவர்களில் 92.7 சதம் பேருக்கும் இரத்த சோகை உள்ளது. பொதுவாக இந்தியாவில் 85சதவீதம் மக்களுக்கு இரத்த சோகை உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000,000 பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன. தினந்தோறும் 2500 பெண் குழந்தைகள் புவியைவிட்டு மறைந்து போகின்றனர். இளந்தாய்மார்கள் உலகைவிட்டு செல்லக் காரணமும் இரத்த சோகைதான். உருவான கரு இறப்பதும், மகப்பேறின் போது தாய்மடிவதும் வளர்முக நாடுகளில்தான் அதிகம்.

சோகையின் சோகமான காரணிகள்..!

இந்தியாவில் 13-19 வயது கிராமப் பெண்களிடம் எடுத்த கணக்கெடுப்புப்படி கீழ்க்கண்ட தகவல்கள் சேகரிக் கப்பட்டுள்ளன. ஹரியானா-37 சதம், இராஜஸ்தான் 73 சதம், மும்பையின் நகர்ப்புற குடிசைவாசிகள் 63.5 சதம், குஜராத் 63 சதம், தமிழ்நாடு 53.7 சதம் என உள்ளது. வடஇந்தியாவில் 16-70 வயதுள்ளவர்களில் ஆண், பெண் இருபாலருக்கும் இரத்தசோகை 47.9சதம் காணப்படுகிறது. ஆண்கள் 50 சதம், பெண்கள் 44.3 சதம், இந்தியாவில் எல்லாப் பெண்களிடமும் முக்கியமாக கருவுற்ற பெண் களிடம் 42 சதம் இரத்த சோகை பாதிப்பு உள்ளது. இது நகர்ப்புற பெண்களைவிட, கிராமப்பகுதி பெண்களிடம் அதிகமாக உள்ளது. குறைந்த வருமானம், குறைவான உணவு, சத்துணவு இன்மை, கல்வியின்மையே இதன் காரணியாக அமைகிறது. இதனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தை எடை குறைவாக இருக்கிறது. உரிய காலத் திற்கு முன் பிறக்கிறது பிறந்தவுடன் மரிக்கிறது. உயிர் வாழ்ந்தாலும் அனைத்து வகை வளர்ச்சியிலும் குறை பாடாகவே வளர்கிறது.

சென்னையின் நிலை!

சென்னை மாநகராட்சி துவக்கப் பள்ளியின் உணவு நிலைமை மற்றும் நோய்த் தொடர்பாகத் தகவல் திரட்டப்பட்டது. உணவு போதாத குழந்தைகள் 64.4 சதம், எடைகுறைவானவை 58 சதம், இரத்த சோகை 33 சதம் என தெரிகிறது. 6-59 மாத இந்தியக் குழந்தைகளிடம் 2005-2006ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 69.5 சதம் குழந்தைகள் இரத்தசோகையுடன் இருப்பது தெரியவந்தது. இதில் நகர்ப்புறக் குழந்தைகள் 63 சதம், கிராமப்புற குழந்தைகள் 71.5 சதம், பள்ளி செல்லும் குழந்தைகளிடம் உள்ள இரும்புச்சத்து பற்றாக்குறை குழந்தைகளின் பழக்கவழக்கங்களையும், மன வளர்ச்சி யையும், கல்வியில் நாட்டத்தையும், அறிவு வளர்ச்சி யையும் நிறையவே பாதிக்கிறது.


கேரளா-ரோல் மாடல்

இந்தியாவில் கேரள மாநிலம் கல்வியறிவில் உயர்ந்த நிலை வகிப்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவில் இரத்தசோகை குறைவாக உள்ள மாநிலமும் கேரளாதான். 11.4 சதம் மட்டுமே. குறைந்த சத்துணவு பெறுபவர்கள் 16.3 சதம், மாமிசம் உண்பவர்கள் 12.7 சதம், காய்கறி உணவு உட்கொள்பவர்களிடம் 9.27 சதம் மட்டுமே இரத்த சோகை உள்ளது. கேரளாவில் இரத்தசோகை குறைவாக இருப்பதற் கான காரணம் கல்வியறிவும், சமூகப் பொருளாதார அறிவியல் விழிப்புணர்வும் தான்.

இரத்தசோகை வராமல் தடுக்க!

* கருவுற்றதிலிருந்து தாய் சத்தான, பச்சை காய்கறிகள் உள்ள உணவு உட்கொள்ளுதல்

* பிறந்தவுடன் முதல் மூன்று மாதம் குழந்தையின் வாழ்வில் முக்கியம். உடல், மன, எலும்பு வளர்ச்சிக்குத் தாய்ப்பால் தரவேண்டும்.

* ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மட்டுமே இரும்புச்சத்துக்கு போதாது. இரும்புச்சத்து அதிகம் உள்ள மேல் உணவு தரவேண்டும்.

* குழந்தை பெரிதானதும் தானியம், பருப்பு வகைகள், முட்டை கரு, தக்காளி, மீன், பச்சைக் காய்கறிகள், கீரை உணவு அதிகம் தருவது அவசியம்.

இன்றைய தேவை

இரும்புச்சத்து பற்றாக்குறையான இரத்த சோகையின் முக்கிய கரு குடும்பத்தின், சமூக, பொருளாதார, கல்விச் சூழல்தான். இது பெண்களின் உடல் நிலையைத்தான் இன்றைய சமூக சூழலில் பெரிதும் பாதிக்கிறது. எனவே அரசும் இதனை உணர்ந்து மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் தருவதுடன், மருத்துவ முகாம்களும் நடத்த வேண்டும். உடல் நலம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும். இவை இரண்டும் இரண்டறக் கலந்த கொள்கையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும். கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் அதிக இரும்புச் சத்து எடுத்துக் கொள்ளச் சொல்லி தகவல் தொடர்பு சாதனங்களை அடிக்கடி அரசு பயன்படுத்த வேண் டும். இதை மக்களும், அரசும், சமூக கண்காணிப் பாளர்களும் கவனத்தில் கொள்வது காலத்தின் கட்டாயம்.

நன்றி -பேராசிரியர் சோ.மோகனா

Saturday, August 2, 2008

குழந்தைகளின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்

நோய்க்கு சிகிச்சை அளிப்பதைவிட நோய்த்தடுப்பே சிறந்தது என்ற நோக்கத்துடன் தேசிய நோய்த்தடுப்பு திட்டம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பிறகு அது விரிவுபடுத்தப்பட்ட நோய்த்தடுப்பு திட்டம் (EPI), என்று மாற்றப்பட்டு நம் நாட்டில் அமலாக்கப்பட்டு இலவசமாக நோய்த் தடுப்பு மருந்துகளை வழங்கி வந்தது. பிறகு முழுமையாக்கப்பட்ட நோய்த்தடுப்பு திட்டம் (UIP) என்று மாற்றப்பட்டு மேலும் கூடுதலாக நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை பிறந்தவுடன் துவங்கி 9 மாதத்திற்குள் பலவிதமான நோய்த்தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகின்றன.

அரசு நீண்டகாலமாக குழந்தைகளுக்கு இலவசமாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கிவருகிறது. தொண்டை அடைப்பான், காசநோய், கக்குவான், இருமல், கர்ப்பகாலங்களில் ஏற்படும் ரனஜன்னி, மூளைக்காய்ச்சல், இளம்பிள்ளைவாதம் போன்ற கொடிய நோய்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒரு ஆண்டில் பிறக்கும் சுமார் 2.60 கோடி குழந்தைகளுக்கும் புதுவையில் 25 ஆயிரம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நோய்த்தடுப்பு மருந்ததுகள் 80%-ம் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டுவந்தது. சென்னை கின்டியில் உள்ள பி.சி.ஜி.யூனிட், குன்னுரில் உள்ள பாஸ்டியர் யூனிட், இமாச்சலபிரதேசத்திpல் உள்ள கசௌலி ஆய்வு மையம் ஆகிய 3 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களிலும் இவ்வாண்டு ஜனவரி 15 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரனமாக பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மெல்ல மெல்ல இலவச தடுப்பூசித் திட்டம் கைவிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் அபாயம் உருவாகி வருகிறது. 2000-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சுகாதார வசதி வழங்கிட வேண்டும் என்ற சர்வதேச மாநாட்டின் முடிவை அமலாக்குவதற்கு மாறாக தடுப்பூசி மருந்துக்கே கட்டணம் என்ற நிலை ஏற்படும் அயாயம் உருவாகி உள்ளது.

இன்றைய சூழலில் மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சுகாதாரம், நோய்த்தடுப்பு போன்றவற்றில் அனைத்து தரப்பு மக்கள் மீதும் எதிர்மறை தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட, பெரும்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இந்திய நாட்டில் இன்றளவும் 65% மக்கள், மருத்துவரால் இன்றளவும் பெரும்பான்மையான குழந்தைகள் ஊட்டசத்தின்மையால் பாதிப்படைந்துள்ளனர். இன்றளவும் கர்ப்பக்கால மரணம் மற்றும் குழந்தை இறந்தே பிறப்பது, பிறந்து சிறிது நேரத்தில் இறப்பது போன்றவை கணிசமான அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது தேசிய நோய் தடுப்பு திட்டம் போன்றவைக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டாலும், போலியோ, காசநோய், மலேரியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உயிரிழப்பு பெருமளவு தொடர்ந்து கொண்டிருக்கிறது

மருந்து உற்பத்திக்கான (எந்த வடிவிலிருந்தாலும்) செலவு என்பது மருந்தின் மொத்த விலையில் 150% முதல் 500% வரையில் குறைவு என்பதாகும். இந்த அடிப்படையில் குறைந்த விலையில் உற்பத்தி செய்துவந்த பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தம் என்பது, நேரடியாக இலவச நோய்த்தடுப்புதிட்டத்தை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இதற்கு எதிரான எல்லா நடவடிக்கையை ஆதரிப்போம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ள இலவச தடுப்பூசி திட்டத்தை பாதுகாப்போம். குழந்தைகளின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்.