சென்னை, குன்னூர் மற்றும் கசவுலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவது என்ற முடிவை மத்திய அரசு மாற்றியுள்ளது. தனியார் நிறுவனங்களை நம்ப முடியாது என்ற நிலையில் தற்போது இம்மையங்களை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தின் சென்னை, குன்னூர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் கசவுலி ஆகிய இடங்களில் இயங்கி வந்த தடுப்பூசி உற்பத்தி நிலையங்களை மூடுவது என மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் புதுச்சேரி மக்கள் நல்வாழ்வு சபையும் நாடு முழுவதும் உள்ள அறிவியல் இயக்கங்ளும் மேற்கொண்ட கடுமையான போராட்டத்தின் காரணமாகவும் ,இம்முடிவினால் தனியார் தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் லாபமடையும் என்றும், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
ஆனால், இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல், உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி வரைமுறைகளுக்கு உள்ளிட்டு இம்மையங்களில் தடுப்பூசி உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதற்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
ஆனால், நாடு முழுவதற்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை, குறைந்த செலவில் தனியார் நிறுவனங்களினால் வழங்கமுடியாது என்பதை அறிந்து, தற்போது மீண்டும் இந்த 3 நிலையங்களிலும் உற்பத்தியை தொடங்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.
கடந்த 3 காலாண்டுகளாக டிபிடி மற்றும் டிடி தடுப்பூசி மருந்துகளுக்கு இந்தியாவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குன்னூரிலுள்ள பாஸ்டியர் இன்ஸ்ட்டியூட் மற்றும் கசவுலியிலுள்ள மத்திய ஆய்வு நிறுவனம் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசிகள் தயாரிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். விரைவில் இதற்கான உத்தரவு கடிதம் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
லாபமின்றி தடுப்பூசி மருந்துகள் குறைந்த விலையில் தருவதாக உறுதியளித்திருந்த தனியார் நிறுவனங்கள், பின்னர் தங்களது வாக்குறுதியை மீறி விலையை 40 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்தனர் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் செயலாளர் டாக்டர்.சுரீந்தர் சிங் தலைமையிலான நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையில், கசவுலி மையத்தை சின்னம்மை கண்காணிப்பு மையமாகவும், தடுப்பூசி மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்யும் வகையில் தேசிய ஆய்வகமாகவும் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1 comment:
நாளை உங்களுடைய அம்பத்தூர் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்
இது போன்ற மாநாடுகள் தமிழகமெங்கும் நடைபெறவேண்டும்
Post a Comment